அருணாச்சல் பயணம் மேற்கொண்டிருக்கும் அமித் ஷாவுக்கு சீனா கடும் எதிர்ப்பு!

அருணாச்சல் பயணம் மேற்கொண்டிருக்கும்
அமித் ஷாவுக்கு சீனா கடும் எதிர்ப்பு!

ந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்றும், நாளையும் இந்திய சீன எல்லை பகுதியில் உள்ள கிபித்தூ என்ற கிராமத்தில் சில நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில், உள்துறை அமைச்சரின் இந்தப் பயணத்துக்கு சீனா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "ஜாங்னன் (அருணாச்சலப் பிரதேசத்துக்கு சீனா வைத்துள்ள பெயர்) சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. அங்கே இந்திய உள்துறை அமைச்சர் செல்வது பீஜிங் பிராந்திய இறையாண்மைக்கு எதிரானது. அவரது இந்தச் செயல் எல்லையில் அமைதிக்கு உகந்தது அல்ல" என்று தெரிவித்து இருக்கிறார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் மீது உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஓர் அங்கம் எனக் கூறி வருகிறது. திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் ஜாங்னன் பகுதியை சீனா ஜிஜாங் என குறிப்பிடுகிறது. இந்நிலையில், இந்த ஜாங்னன் பகுதியைச் சேர்ந்த 11 இடங்களின் பெயர்களையும் சீன உள்துறை அமைச்சகம் மாற்றி இருக்கிறது. இதில், அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இடா நகரின் அருகில் உள்ள ஒரு நகரின் பெயரையும் சீனா மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெயர் மாற்ற அறிவிப்பை சென்ற ஏப்ரல் 2ம் தேதி சீனாவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளுக்கு அதிகாரபூர்வமான புதிய பெயர்களை வெளியிட்டு, அவற்றின் மீது உரிமை கொண்டாடும் சீனாவின் முயற்சியை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "சீனா இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வது இது முதல்முறை அல்ல. இந்த முயற்சியை முழுமையாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஓர் அங்கமாக; பிரிக்க முடியாத பகுதியாகவே இருந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் சில பெயர்களை மாற்றுவதால் அது தனது நிலையிலிருந்து மாறிவிடாது" எனக் கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com