
விண்வெளி துறையில் அமெரிக்கா ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் சீனா இன்று 30 ஆவது முறையாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகிறது.
ஏற்கனவே பல ஸ்பேஸ் மிஷின்களில் சாதித்துக் காட்டியுள்ள சீனா, விண்வெளியில் தனக்கென பிரத்தியேகமாக விண்வெளி மையம் அமைத்து வருகிறது. ஏற்கனவே விண்வெளியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா உருவாக்கி வைத்துள்ள விண்வெளி மையம் வரும் 2025 ஆம் ஆண்டுடன் கைவிடப்படவுள்ளது. எனவே அதற்குள்ளாக தங்களுக்கென ஒரு தனி விண்வெளி மையத்தை உருவாக்க சீனாவும் ரஷ்யாவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில்தான் தங்களின் ஸ்பேஸ் ஸ்டேஷனை மேம்படுத்தும் பணிக்காக மூன்று விண்வெளி வீரர்கள் இன்று காலை சரியாக 11.14 மணிக்கு ஷென்சோ - 17 விண்கலம் மூலமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டனர். இந்த ஷென்சோ திட்டத்தின் கீழ் சீனாவில் இருந்து 12-வது முறையாக மனிதர்கள் விண்வெளிக்கு செல்கின்றனர். ஏற்கனவே இதுவரை 29 முறை சீன விஞ்ஞானிகள் விண்வெளிக்கு சென்றிருந்த நிலையில், இந்த பயணமானது 30வது முறையாகும்.
இந்த விண்வெளி வீரர்கள் சுமார் ஆறு மாதங்கள் வரை விண்வெளியில் தங்கி தங்களின் விண்வெளி மையத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். பணிகள் நிறைவடைந்ததும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் மங்கோலியாவில் இவர்கள் தரையிறங்குவார்கள். இந்த திட்டமானது இந்தியாவுக்குக் கூடுதல் சவாலாக மாறியுள்ளது.
ஏனென்றால் சீனாவும் இந்தியாவும் ஒரே காலகட்டத்தில் தான் விடுதலை பெற்றன. ஆனால் இரு நாடுகளின் வளர்ச்சிப்பாதையும் முற்றிலும் வித்தியாசமானது. பொருளாதாரம், மனித வளம் என அனைத்திலுமே அதிகப் முன்னேறி இருப்பது சீனாதான். குறிப்பாக விண்வெளித் துறையில் இந்தியாவை விட ஏராளமான சாதனைகளை அவர்கள் செய்திருக்கின்றனர்.
இதுவரை 30 முறை சொந்த நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை விண்ணுக்கு சீனா அனுப்பியுள்ள நிலையில், இந்தியா ஒருமுறை கூட மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவில்லை. இந்தியாவின் இந்த கனவு 2025 இல் தான் நனவாகும் என சொல்லப்படுகிறது. மேலும் மற்ற நாடுகளைப்போல இந்தியா தனக்கான விண்வெளி மையத்தை உருவாக்க மேலும் பல வருடங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. அதற்குள்ளாக மொத்த விண்வெளியையும் சீனாவே ஆக்கிரமித்துவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.