

சில சமயங்களில் சிலர் தெரியாமல் அல்லது அறியாமையால் செய்யும் செயல்கள் பெரும் பொருட் சேதத்தையும், பாதிப்பையும், நஷ்டத்தையும் ஏற்படுத்துவடன் மற்றவரின் கேலிக்கும் ஆளாக வேண்டியிருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் தெற்கு சீனாவில் நடந்துள்ளது.
அதாவது, ஓட்டலில் ஈரத்துணியை எங்கே காயப்போடுவது என்று தெரியாமல், ஒருவர் செய்த தவறுக்கு ரூ.19 லட்சம் அபராதம் கட்டியுள்ளார். தெற்கு சீனாவில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார். அந்த நபர் அங்கு குளித்த அவர் ஈரத்துணியை எங்கு உலர்த்துவது என்று தெரியாமல், வசதியான இடத்தைத் தேடிக்கொண்டிருந்த நிலையில், அறையில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கம்பியில், துணிகளை உலர்த்துவதற்கு ஒரு தற்காலிக ஹேங்கராக பயன்படுத்தி துணியை தொங்கவிட்டார். பின்னர் அவர் வெளியே சென்றுவிட்டார்.
அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. அவர் துணியை தொங்க விட்ட கம்பி, தீயணைப்பு சாதனத்தின் ‘லிவர்’ பகுதியாகும். நெருப்பு பற்றியதை உணர்ந்தால் தானியங்கி முறையில் செயல்படக்கூடியது. ஆனால் அவர் அதன் மீது துணியை தொங்கவிட்டதால், அது ஈரமாகி சேதமடைந்து தீயணைப்பு அமைப்பு செயல்படத் தொடங்கியது. அறை முழுவதும் அதிக அழுத்தத்தில் டன் கணக்கில் தண்ணீரை அறைக்குள் பாய்ந்து, சில நிமிடங்களில் அந்த அறையை வெள்ளத்தில் மூழ்கடித்ததுடன், கீழே உள்ள பல தளங்களிலும் கசிந்தது.
அதுமட்டுமின்றி திடீரென ஏற்பட்ட வெள்ளம் குறைந்தது இரண்டு தளங்களில் உள்ள வால்பேப்பர், தரை, தளபாடங்கள் மற்றும் மின் அமைப்புகளுக்கு பரவலான சேதத்தை ஏற்படுத்தியது.
இதனால் ஓட்டல் நிர்வாகத்தினர் அந்த வாடிக்கையாளருக்கு கடும் அபராதம் விதித்தனர். தீயணைப்பு சாதனம் சேதம் அடைந்தது மற்றும் அறையில் ஏற்பட்ட பாதிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் சுத்தம் செய்யும் செலவுகளை ஈடுகட்ட ஹோட்டல் 150,000 யுவான் (தோராயமாக ரூ.19 லட்சம்) அபராதமாக விதிக்கப்பட்டது.
இதுகுறித்து உள்ளூர் தீயணைப்பு நிபுணர்கள் கூறுகையில், ‘தானியங்கி தெளிப்பான்கள் அதிக வெப்பம் அல்லது தாக்கத்திற்கு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தீ ஏற்படாவிட்டாலும், வெப்பநிலை 68–74 டிகிரியை எட்டாவிட்டாலும், கனமான பொருள் தொங்கவிடப்பட்டாலோ அல்லது தாக்கம் ஏற்பட்டாலோ தண்ணீர் வெளியேறும்" என்றனர்.
இதுபற்றிய தகவல்கள் சமுக வலைத்தளத்தில் வைரலாக பரவிய நிலையில் பலதரப்பினரும் அந்த நபருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.