தைவானின் கடல் பகுதிகளை சீனாவின் விமானங்களும், கப்பல்களும் சுற்றி வளைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
தைவான் தனி நாடல்ல ,அது சீனாவின் ஒரு பகுதி என்று தொடர்ந்து சீனா சொல்லி வருகிறது. ஆனால் தைவானோ எங்களுக்கென்று தனி இறையாண்மை உள்ளது. நாங்கள் தனி நாடு தான் என்கிறது தைவான். கிழக்காசியாவில் தென் சீன கடல், கிழக்கு சீன கடல் மற்றும் பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவற்றிற்கு மத்தியில் இருக்கும் தீவுதான் தைவான்.
இந்நிலையில் தைவான் பாதுகாப்புத்துறை வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில் இன்று காலை ஆறு மணி வரை தைவானைச் சுற்றி சீனாவின் 7 விமானங்களும், 11 கடற்படை கப்பல்களும் ரோந்து வந்ததை உறுதி செய்ததாகவும், அவர்களின் ஆயுதப்படைகள் நிலவரத்தை கண்காணித்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. சீனாவின் இந்த செயலால் கிழக்காசியப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
சீனா தைவானை ஒருபோதும் பிரிக்க முடியாத பகுதி என்று கருதுகிறது. எனவே தான் தைவானை அடிக்கடி அச்சுறுத்தி, அதன் சுயாட்சியை மிரட்டுவதற்காக, அடிக்கடி தைவனைச் சுற்றி ராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது. இதில் விமானங்கள், போர்க்கப்பல்கள், டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் சுற்றி வளைப்பதும், அதன் விமான பாதுகாப்பு மண்டலத்தில் ஊடுருவுவதும், போர் ஒத்திகைகள் செய்வதுமாக அந்தப் பகுதியில் எப்போதும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.
அதேவேளை, தீவு நாடான தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. தைவானுக்கு அதிக அளவில் அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. சீனா படையெடுக்கும் பட்சத்தில் தைவானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது