சீனாவின் சார்பில் கடலுக்கு அடியில் போடப்பட்டு இருந்த சங்கிலி வலையில் சிக்கி அந்நாட்டுக்கு சொந்தமான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 55 ராணுவ வீரர்களும் உயிரிழந்துவிட்டதாக இங்கிலாந்தை சேர்ந்த 'தி டைம்ஸ்' இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தி டைம்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சீனாவுக்கும் கொரியாவுக்கும் இடையேயான மஞ்சள் கடல் பகுதியில் சங்கிலி பொறி வைக்கப்பட்டு இருந்தது. கடலுக்கு அடியில் மற்ற நாட்டைச் சேர்ந்த நீர்மூழ்கி கப்பல்கள் சீனாவுக்குள் ஊடுறுவதை தடுக்க இந்த ஏற்பாட்டை அந்நாடு செய்திருந்தது. இந்நிலையில், சீனாவுக்கு சொந்தமான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கடந்த ஆகஸ்ட் மாதம் சிக்கிக்கொண்டதாகவும் அந்தக் கப்பலில் இருந்த 21 அதிகாரிகள் உட்பட மொத்தம் 55 சீன ராணுவ வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக தி டைம்ஸ் நாளிதழில் கூறப்பட்டுள்ளது.
எதிரி நாட்டு கப்பல்களைத் தடுப்பதற்காக சீன ராணுவத்தினரால் வைக்கப்பட்டிருந்த நங்கூரத்திலும், இரும்பு சங்கிலியிலும் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பலே சிக்கிக்கொண்டது. சங்கிலியில் சிக்கிக்கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் மேற்பகுதிக்கு வருவதற்கே 6 மணி நேரத்திற்கு மேல் ஆனதால், அதற்குள்ளாக கப்பலில் இருந்த ஆக்சிஜன் முழுமையாக தீர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் அனைத்தையும், கடல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த உளவு பார்க்கும் கருவிகள் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளது என லண்டன் இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் சீனாவின் BLA ராணுவப் பிரிவுக்கு சொந்தமான 093-417 எண் கொண்டது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனா கடற்பகுதிக்குள் அவர்களின் நட்பு நாடுகள் உட்பட எந்தக் கப்பல்களும் உள்ளே நுழைவதைத் தடுக்கவே, இத்தகைய சங்கிலிப் பொறிகளை சீனா வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக, அவர்கள் வைத்த பொறியில் அவர்கள் நாட்டு கப்பலே சிக்கி கடற்படையைச் சேர்ந்த 55 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆனால் இதுகுறித்து பேசிய தைவான் ராணுவம் "சீன ராணுவத்தின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதை எந்த கண்காணிப்பு அம்சமும் கண்டுபிடிக்கவில்லை" என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.