சீனத்து கொரோனா : இதுவரை வரவில்லை இனிமேல் வருமா?  

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் புதிய வகை கோவிட் தொற்று உறுதி செய்யப் படவில்லை என்று தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். சென்ற வாரம் சீனாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த பயணிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால், புதிய வகை பிஎப் 7 இல்லையென்பது தெரிய வந்திருக்கிறது.  

சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பானில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கு கோவிட் பரிசோதனை கட்டாயமாக்கப் பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டிருக்கிறது. சீனாவிலிருந்து யார் வந்தாலும், கோவிட் பரிசோதனை கட்டாயம் என்பதை இந்தியா மட்டுமல்ல கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் அறிவித்துள்ளன.  

ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகளையும் பிற ஆவணங்களையும் பதிவேற்றிய பின்னரே இனி பயணம் மேற்கொள்ள முடியும். 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு, நெகட்டிவ் வந்தபின்னர் சான்றிதழோடு மட்டுமே பயணம் செய்ய முடியும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.  

தெற்காசியா நாடுகளிலிருந்து வேறு எந்த நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து இந்தியாவுக்குள் வந்தாலும் 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை எடுத்தாக வேண்டும். பிற நாடுகளிலிருந்து வருபவர்களில் 2 சதவீத பயணிகளுக்கு மட்டுமே ஆர்டிபிசிஆர் சோதனைகள் எடுக்கப்படுகின்றன.  

பிஏ 5.2, பிஏ 7 இரு விதமான கொரோனா தொற்றுக்கிருமிகள்தான் தெற்காசிய நாடுகளை உலுக்கி வருகின்றன. மலேசியாவைப் பொறுத்தவரை இத்தகைய கிருமி தொற்றினால் யாரும் உயிரிழந்ததாகவோ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. இரண்டுமே ஒமைக்ரான் வகையைச் சேர்ந்தது என்கிறார்கள்.  

புதிய வகை கொரோனா, மூளையை பாதிக்கும் என்று வெளியான செய்திகளை நேற்று மத்திய அரசு மறுத்திருக்கிறது. உலகச் சுகாதார நிறுவனமோ கடந்த இரண்டு மாதங்களாக அமைதி காக்கிறது. 2023ல் கொரோனா அலை இருக்காது என்று முன்னர் அறிவித்த உலக சுகாதார நிறுவனம், சீனா போதிய தகவல்களை கொடுத்தால் மட்டுமே ஒரு முடிவுக்கு வரமுடியும் என்கிறது. 

சீனாவில் என்ன நடக்கிறது? அதுதான் தெரியவில்லை. கொரோனா இழப்பு பற்றி சீனா உறுதியான தகவலை எந்நாளும் தந்ததில்லை. சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா இழப்பு பற்றி அறிவிப்பதையே நிறுத்திவிட்டார்கள். ஆனால், தினசரி ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.   

சீனா அதிகாரப்பூர்வமாக இழப்புகளை அறிவிக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தால், அதற்குள் 2024 வந்துவிடும்! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com