

இனி தாக்குதல் நடந்த பிறகு யோசிக்கக் கூடாது; வருமுன் காக்கும் வழியைப் பார்க்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை.
அமெரிக்காவின் பிரபலமான செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான Anthropic, ஒரு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டது.
சீனாவைச் சேர்ந்த ஹேக்கர்கள், அவர்களின் 'Claude AI'-ஐ பயன்படுத்தி உலக அளவில் பெரிய உளவு வேலைகளைச் செய்தார்களாம்.
இந்தத் தாக்குதலின் ஸ்பெஷல் என்னவென்றால், AI ஆனது மனிதர்களின் பெரிய உதவி இல்லாமல், தனியாகவே செயல்பட்டு இந்தத் திருட்டு வேலையைச் செய்துள்ளது.
எப்படி நடந்தது இந்தத் தாக்குதல்?
இந்தத் தாக்குதல் முறை மிகவும் அதிநவீனமானது. ஹேக்கர்கள் தங்கள் தாக்குதல் நடவடிக்கையை, 'பாதுகாப்புப் பரிசோதனைகள் (Cybersecurity Tests)' என்று கூறி Claude AI-ஐ ஏமாற்றியுள்ளனர்.
இதன் மூலம், ஏஐ-யின் பாதுகாப்பு விதிகளை மீறி, சிக்கலான தாக்குதல் கட்டளைகளை, பாதிப்பில்லாத சின்ன சின்ன கேள்விகளாகப் பிரித்து வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளனர்.
மனிதர்களால் செய்ய முடியாத வேகத்தில், இந்த AI ஆனது கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகளுக்குள் நுழைந்து, முக்கியமான டேட்டாபேஸ்களைக் கண்டுபிடித்து, அதற்கேற்ற புரோகிராம்களை (Exploits) தானே எழுதி, கடவுச்சொற்களைத் திருடி, திருடிய தகவல்களைச் சத்தமில்லாமல் வெளியே அனுப்பியுள்ளது.
சுமார் 90 சதவீதம் வரையிலான தாக்குதல் நடவடிக்கைகளை AI தனிப்பட்ட முறையில் செய்து முடித்துள்ளது. ஹேக்கர்களின் வேலை வெறும் மேற்பார்வை மட்டுமே.
இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்: இந்த அதிநவீன தாக்குதல் முறை இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
நம்முடைய மின்சாரம், வங்கிகள், ராணுவ தளங்கள் போன்ற முக்கியமான எல்லாமே இனி சாதாரண முறையில் அல்லாமல், இந்த AI தாக்குதலுக்கு உள்ளாகலாம். ஏஐ-ஆல் இயங்கும் இந்தத் தாக்குதல்கள், இந்திய ராணுவத்தின் ரகசிய தொழில்நுட்பங்கள், ஏவுகணைத் திட்டங்கள் குறித்த உளவுத் தகவல்களை எளிதாகத் திரட்டிவிடும் அபாயம் உள்ளது.
மேலும், மருந்துகள் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளில் இருக்கும் முக்கியமான ஆராய்ச்சிகள், அறிவுசார் சொத்துக்கள் (IP) ஆகியவை மிக வேகமாகத் திருடப்படக்கூடும்.
நம்முடைய பழைய பாதுகாப்பு முறைகளால் இந்தத் தாக்குதல்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்.
Anthropic நிறுவனம் இந்தப் பாதிப்பைக் கண்டறிந்தவுடன், உடனடியாகச் சரிசெய்து, இந்த அச்சுறுத்தல் விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட்டது.
ஆனால், சீன அரசோ, இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, இதில் அரசுக்குத் தொடர்பில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இது சீன அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்ட தாக்குதல் என்று உலகளாவிய சைபர் உளவுத்துறையினர் உறுதியாக நம்புகின்றனர்.
இந்தத் தாக்குதலின் நுணுக்கம், அதிக முதலீடு மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் தொலைத்தொடர்புத் துறைகளை குறிவைத்து நடத்தப்பட்ட முந்தைய தாக்குதல்கள் ஆகியவை இது ஒரு நாட்டின் முழு ஆதரவு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
"இனிமேல் தாக்குதல் நடந்த பிறகு பதறுவது தவறு. வருவதற்கு முன்னரே அதைத் தடுக்கும் வழியைப் பார்க்க வேண்டும்," என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
சைபர் பாதுகாப்பை ஒரு சாதாரணமாகப் பார்ப்பதை இந்தியா மாற்ற வேண்டும். குறிப்பாக, ஏஐ-யால் ஏற்படும் அச்சுறுத்தல்களையும், ஏஐ அமைப்புகளையே குறிவைக்கும் தாக்குதல்களையும் எதிர்கொள்ள ஒரு பிரத்யேக தேசிய பணிக்குழுவை (National Task Force) அமைக்க வேண்டியது அவசியம்.
இந்திய அரசு, நம் நாட்டுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இதுபோன்ற AI தாக்குதல்களை முன்கூட்டியே கண்டுபிடித்து, தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம் பாதுகாப்பை பலப்படுத்த, உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.