

சாதாரண எறும்புகள் தானே என நினைப்போம்.ஆனால் அவற்றை வைத்து சர்வதேச அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. ஆம்.எறும்புகள் சர்வதேச பல்லுயிர் ஒப்பந்தங்களால் பாதுகாக்கப்படுகின்றன என்பதும் அவற்றின் வர்த்தகம் கண்காணிப்புடன் மிகவும் ஒழுங்குபடுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராணி எறும்புகள் ஒரு முழு எறும்பு குடியிருப்பை உருவாக்கும் திறன் கொண்டவை என்றும் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் சிலர் எறும்புகளை பொழுதுபோக்கு (hobby-)ஆக வளர்ப்பதால் (ant-keeping) அதிக தேவை உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கென்யாவிலிருந்து 2,000 க்கும் மேற்பட்ட ராணி எறும்புகளை கடத்த முயன்றதாக 27 வயதான சீன நாட்டு நபரான Zhang Kequn என்பவர் நைரோபி Jomo Kenyatta International Airport-ல் இருந்து சீனாவிற்கு புறப்பட முயன்றபோது பிடிபட்டார்.
அவரது பயணப்பெட்டியில் பெரிய அளவிலான உயிருள்ள எறும்புகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து, தலைநகர் நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தில் (JKIA) பாதுகாப்பு சோதனையின் போது ஜாங் கெகுன் தடுத்து நிறுத்தப்பட்டார்.
சோதனையில் சுமார் 2,238 உயிருடன் உள்ள ராணி எறும்புகள் இருந்தது தெரியவந்தது. அதில் 1,948 டெஸ்ட் டியூப் (test tube)-களிலும் மேலும் 300 டிஷ்யூ பேப்பர்(tissue paper-) ரோல்களிலும் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு, கென்யா வனவிலங்கு சேவை (KWS) ஐரோப்பாவிலும் , ஆசியாவிலும் "மெஸ்ஸோர் செபலோட்டுகள்" என்று அறிவியல் ரீதியாக அழைக்கப்படும் தோட்ட எறும்புகளுக்கான தேவை அதிகரித்து வருவதாக எச்சரித்திருந்தது.
இந்த எச்சரிக்கை மீறி கடந்த மே மாதம், கென்யா நீதிமன்றம், ஆயிரக்கணக்கான உயிருள்ள ராணி எறும்புகளை நாட்டிலிருந்து வெளியே கடத்த முயன்றதற்காக முதல் முறையாக நான்கு பேருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை அல்லது $7,700 (£5,800) அபராதம் விதித்தது.
இரண்டு பெல்ஜியர்கள், ஒரு வியட்நாமியர் மற்றும் ஒரு கென்யா என நான்கு சந்தேக நபர்கள் -KWS "ஒருங்கிணைந்த, உளவுத்துறை தலைமையிலான நடவடிக்கை" என்று விசாரணை செய்து கைது செய்யப்பட்ட பின்னர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.
பெல்ஜியர்கள் நீதிமன்றத்தில் மிகவும் விரும்பப்படும் எறும்புகளை ஒரு பொழுதுபோக்காக சேகரித்து வருவதாகவும், அது சட்டவிரோதமானது என்று நினைக்கவில்லை என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. சிங்கங்கள் மற்றும் யானைகள் போன்ற பெரிய உயிரினங்களைப் பாதுகாக்கப் பழகிய KWS, இந்த தீர்ப்பை "மைல்கல் வழக்கு" என்று விவரித்தது சிறப்பு.
ஆனால் இந்த கடத்தல் கும்பலுக்குப் பின்னால் இருந்த மூளையாக ஜாங் இருந்ததாக புலனாய்வாளர்கள் இப்போது கூறுகின்றனர், கடந்த ஆண்டு வேறு பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி கென்யாவிலிருந்து தப்பிச் சென்றதாகவும் குறிப்புகள் கூறுகிறது.
இந்நிலையில் தற்போதைய குற்றச்சாட்டுக்கு அவர் இன்னும் பதிலளிக்கவில்லை என்றாலும் கடந்த ஆண்டு கென்யாவில் எறும்பு கடத்தல் குழுவுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக புலனாய்வாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணைகளை நடத்துவதற்காக, அவரை ஐந்து நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக ஊடகங்கள் குறிப்பிடுகிறது.
இந்த கடத்தல் மூலம் சட்டவிரோத அயல்நாட்டு செல்லப்பிராணி சந்தையில் (illegal exotic pet market) அதிக விலை கிடைப்பதால் இது பெரிய வனவிலங்கு கடத்தல் நெட்வொர்க்-க்கு (wildlife trafficking network)- தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக கருதப்படுகிறது.
எறும்புகளை இயற்கையிலிருந்து அகற்றுவது சுற்றுச்சூழல் அமைப்பு (ecosystem)-க்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்வது உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும்.