இந்தியாவிற்குள் சீன உளவாளி ஊடுருவல்?

இந்தியாவிற்குள் சீன உளவாளி ஊடுருவல்?

86 வயதான தலாய் லாமா, திபெத்திய பெளத்தர்களின் ஆன்மீகத் தலைவர். இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டுள்ளது. 1935 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொண்டூப் என்ற பெயரில் திபெத்தில் பிறந்த அவர், தலாய் லாமாவின் 14-வது அவதாரமாக அடையாளம் காணப்பட்டார். திபெத் தலைநகர் லாசாவில் வசித்துவந்தார்.

1950 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆயிரக்கணக்கான சீன வீரர்கள் திபெத்தை ஆக்கிரமித்து அதை சீனாவின் ஒருபகுதியாக அறிவித்தனர். அடுத்த சில ஆண்டுகளில் திபெத் மீதான தனது பிடியை சீனா இறுக்கியது. அங்கு நிலைமை மோசமானதால், 1959 –இல் தலாய் லாமா திபெத்தைவிட்டு வெளியேறி இந்தியா வந்தார். அப்போது பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு, அவருக்கு தஞ்சம் அளித்தார். இதைத் தொடர்ந்து அவர், இமாச்சல மாநிலம் தர்மசாலாவில் வசித்து வருகிறார். அவருக்கு இந்திய அரசு பாதுகாப்பும் ஆதரவும் அளித்து வருகிறது.

திபெத்திய பெளத்த மத அமைப்பின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தலாய் லாமா என அழைக்கப்படுகிறார்கள். இந்த அமைப்பு 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தமக்குப் பின் தலைமை ஏற்கக்கூடிய ஒருவரை திபெத் சென்று தேர்ந்தெடுக்க தற்போதைய தலாய் லாமா விரும்புகிறார். திபெத்திய மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். ஆனால், சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக அவரால் அங்கு செல்ல முடியவில்லை.

இதனிடையே திபெத்தின் கலாசாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் முகமாக அடுத்த தலாய் லாமாவை நியமித்து திபெத்தியர்களை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர சீனா துடிக்கிறது.

கோவிட் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு வெளியிடங்களுக்குச் செல்லாமல் இருந்த தலாய் லாமா, தமது ஆன்மீக சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளார்.

இதற்காக அவர் இந்த மாதம் 22 ஆம் தேதி பிகார் மாநிலத்தில் உள்ள புத்த கயைக்கு வந்துள்ளார். இங்கு ஆன்மீக கூட்டங்களில் பங்கேற்று கருத்துரை வழங்க திட்டமிட்டுள்ள அவர், சுமார் ஒரு மாத காலம் அங்கு தங்கியிருக்கவும் முடிவு செய்துள்ளார்.

இதனிடையே தலாய் லாமாவின் பிகார் வருகையை அடுத்து புதிய திருப்பமாக திபெத்திய ஆன்மீகத் தலைவரை உளவு பார்க்க சீனப் பெண், புத்த கயையில் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புத் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அந்த பெண்ணின் பெயர் ஸாங் ஜியாலன் என்பது தெரியவந்துள்ளது. அவர் எங்கு பதுங்கியிருக்கிறார் என்று தெரியாத நிலையில் அவரது வரைபடத்தைக் கொண்டு மத்திய, மாநில போலீஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com