இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீன நாட்டிலிருந்து பிரிந்து தைவான் தனி நாடாக உருவெடுத்தது. இதனைத் தாங்கிக்கொள்ள மனமில்லாத சீனா, தைவானை மறுபடியும் தனது நாட்டோடு இணைத்துக்கொள்ள பல்வேறு முறைகளிலும் முயற்சி செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மற்ற நாடுகளுடனான தைவானின் நட்புறவையும் சீனா அடிக்கடி கண்டித்து வருகிறது. மேலும், தைவான் நாட்டை பயமுறுத்தும் விதமாக, அந்நாட்டைச் சுற்றிலும் தனது ராணுவப் படைகளை நிறுத்தி ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது. இதனை மேற்கத்திய உலக நாடுகள் பலவும் கண்டித்தன.
இந்த நிலையில், தைவான் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி சீனாவின் போர் விமானங்கள் நுழைந்ததாக தைவான் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்து, தைவான் நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சன்லி ஃபாங் கூறுகையில், “அதிகாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் (தைவான் நேரப்படி) 37 சீன ராணுவ விமானங்கள் தைவானின் தென்மேற்கு வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் நுழைந்திருக்கின்றன. இதனை தைவான் ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து, ரோந்து விமானங்கள், கடற்படைக் கப்பல்கள், ஏவுகணை அமைப்புகள் பதிலுக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றன. இந்த சோதனைக்குப் பிறகு சீனாவின் ஊடுருவல்கள் தொடர்கின்றனவா என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்து இருக்கிறார். சீன போர் விமானங்கள் தைவானில் அத்து மீறி பறந்ததால் அவ்விரு நாடுகள் இடையே மீண்டும் போர் பதற்ற சூழ்நிலை நிலவுகிறது!