
நெல்லையில் தென்னிந்திய திருச்சபை நடத்தும் பள்ளிகளில் பணி நியனம் செய்வது குறித்து இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலை தொடர்ந்து அதன் பின்னணியில் இருந்ததாக தி.மு.க எம்.பியான ஞானதிரவியத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் கேட்டு தி.மு.க தலைமை நோட்டீஸ் அனுப்பியிருப்பதால் நெல்லை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை தென்னிந்திய திருச்சபை சார்பாக ஏராளமான கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றை நிர்வாகிப்பதில் திருச்சபை உறுப்பினர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. திருச்சபையின் பேராயர் தேர்தல் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அதில் இரு வேறு அணிகள் போட்டியிட்டன. தேர்தலுக்குப் பின்னர் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஒரே குழுவின் கீழ் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து மோதல் ஆரம்பித்தன.
இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாக எம்.பி ஞானதிரவியம் இருப்பதாகக் கூறப்படுகிறது. பள்ளிகள், மருத்துவமனைகளில் ஊழியர்களை நியமிப்பதில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து தென்னிந்திய திருச்சபை சார்பாக நடத்தப்படும் ஒரு பள்ளியின் தாளாளராக இருந்த திமுக எம்.பி ஞானதிரவியத்தை அந்த பதவியில் இருந்து மறை மாவட்ட ஆயர் நீக்கியிருக்கிறார். இது குறித்து விளக்கம் கேட்டு, எம்.பியின் ஆதரவாளர்கள் மத போதகரை தாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இரு தரப்புக்கும் நடந்த மோதல் சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து, விளக்கம் கேட்டு தி.மு.க தலைமையும் எம்.பி ஞானதிரவியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. எம்.பி ஞானதிரவியம் கழக வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிப்பதாகவும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் தலைமை கழகத்திற்குப் புகார்கள் வரப்பெற்றிருப்பதால் ஏழு நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் திமுக எம்.பியின் மீது 5 பிரிவுகளின் கீழ் நெல்லை மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எம்.பியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட மதபோதகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானதிரவியம், தென்னிந்திய திருச்சபை உறுப்பினர்கள் உட்பட 33 பேர் மீது பாளையங்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தென்னிந்திய திருச்சபை, கிறிஸ்தவர்களின் முக்கியமான அமைப்பு. ஏறக்குறைய 40 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதன் கீழ் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மீது ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோஷ்டி பூசல் இருந்து வருகிறது. இதில் தி.மு.க எம்.பியே நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதுதான் அரசியல் வட்டாரங்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.