

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் சிகரெட், புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்களுக்கான விலை வரலாறு காணாத அளவிற்கு உயரும் என கருதப்படுகிறது. தற்போது 1,000 சிகரெட்டுகளுக்கு நீளம் மற்றும் வகையை பொறுத்து ரூ.200 முதல் ரூ.735 வரை வசூலிக்கப்படுகிறது. மேலும் அதனோடு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி மற்றும் கூடுதலாக செஸ் வரியுடன் சேர்ந்து சிகரெட் விற்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய கலால் வரி திருத்த சட்டத்தின் கீழ் 1000 சிகரெட்களுக்கு அதன் நீளம் மற்றும் வகையை பொறுத்து ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை வசூலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வரும் 1-ம்தேதி முதல் புகையிலை பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தபட இருக்கிறது.
மேலும் -செஸ் வரிக்கு பதிலாக புதிய கலால் வரி விதிக்கப்பட உள்ளது. இதனால் ரூ.18-க்கு விற்பனையாகும் பிரபலமான புகையிலை நிறுவனத்தின் ஒரு சிகரெட்டின் விலை, பிப்ரவரி 1-ந்தேதி முதல் 40 சதவீதம் ஜி.எஸ்.டி. மற்றும் புதிய கலால் வரியுடன் சேர்ந்து ரூ.72-க்கு விற்பனையாகும் என கூறப்படுகிறது.
மேலும் மெல்லும் புகையிலை மீதான வரி 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாகவும், ஹூக்கா புகையிலை வரி 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும், பைப் சிகரெட்டுகளுக்கான புகை கலவைகளின் வரி 60-ல் இருந்து 325 சதவீதமாகவும் உயர்த்தப்பட உள்ளது. இதனால் அவை ரூ.50 முதல் ரூ.100 வரைக்கு விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக 40 சதவீத ஜி.எஸ்.டி. வரிக்கு கூடுதலாக இந்த கலால் வரி விதிக்கப்பட உள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் 22-ந்தேதிக்கு அமலுக்கு வந்த புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் செஸ் வரிகள் நீக்கப்படும். மேலும் பீடி மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி. தொடரும் என கூறப்பட்டுள்ளது. இந்த முடிவால் நாட்டில் சிகரெட் பிடிக்கும் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிப்படைவார்கள்.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அதிகளவில் அடிமையாகி வருகிறார்கள். இதனை தடுக்க இத்தகைய விலை உயர்வு அவசியம் தேவை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், புதிய விலையேற்றம் அமலுக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் சில கடைகளில் சிகரெட் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
முன்பு ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட கோல்டு பில்டர் சிகரெட்டுகள் தற்போது ரூ.12-க்கு விற்கப்படுகின்றன. அதேபோல, கிங்ஸ் ரூ.20, சிசர் பில்டர் ரூ.10 என ஒரு சிகரெட்டுக்கு 2 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக, டீக்கடைகள் மற்றும் சிறிய கடைகளில் கேட்டபோது, ‘‘மொத்த விற்பனையாளர்கள் வரும் 1-ம்தேதிக்கு முன்பே விலையை உயர்த்திவிட்டனர். கோல்டு பில்டர் பாக்கெட் (10 சிகரெட்டுகள்) முன்பு ரூ.92-க்கு கிடைத்தது, தற்போது ரூ.97-க்கு வாங்க வேண்டியுள்ளது. பாக்கெட்டில் விலை ரூ.100 என அச்சிடப்பட்டு உள்ளதால், கேள்வி கேட்க முடியவில்லை’’ என தெரிவித்தனர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை கலவையான விமர்சனங்களை பெற்று வரும் அதேநேரம் மறுபுறம் இது கள்ளச்சந்தைக்கு வழிவகுக்கும் என்று விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே அதிக லாபம் சம்பாதிக்கும் ஆசையில் மொத்த வியாபாரிகள் இப்போதே சிகரெட் பதுக்கும் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மற்றொருபுறம் விலையேற்றம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருவதற்கு முன்பே சிகரெட் விலை உயர்ந்துள்ளதால், தமிழ்நாட்டில் புகைப்பிடிப்பவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.