சென்னை ஏர்போட்டில் தியேட்டர்!

சென்னை ஏர்போட்டில் தியேட்டர்!
Published on

விமானங்கள் வருவதில் தாமதம், புறப்படுவதற்கு தாமதம், இணைப்பு விமானத்துக்காக பல மணி நேரம் காத்திருப்பு என பயணிகள் இனி நீண்ட நேரம் வெறுப்புடன் காத்திருக்கத் தேவையில்லை. அந்தக் காத்திருப்பு நேரத்தில் இனிதாக சினிமா பார்த்து நேரத்தைக் கழிக்கலாம். ஆம், இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஐந்து திரைகள் கொண்ட திரையரங்கள் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், காத்திருப்பு நேரத்தில் ஷாப்பிங் செய்ய வசதியாக மல்டி காம்ப்ளெக்ஸ் ஒன்றும் விமான நிலையத்துக்குள்ளேயே வரப்போகிறது.

இந்த ஐந்து திரைகள் கொண்ட விமான நிலைய திரையரங்கத்தை பிவிஆர் நிறுவனம் நேற்று திறந்து வைத்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளின் பொழுதுபோக்குக்காகவும், உறவினர் அல்லது நண்பர்களை வரவேற்கவோ, வழியனுப்பவோ காத்திருப்பவர்களுக்காகவும் இந்த திரையரங்குகள் நிச்சயம் சிறந்த பொழுதுபோக்காக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொழுதுபோக்குக்காக விமான நிலையத்தில் தியேட்டர் அமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தத் தியேட்டரில் ஒரே நேரத்தில் சுமார் 1,150 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிப்பவர்கள் புதிதாகக் கட்டப்பட்ட இணைப்புப் பாலம் வழியாக இந்தத் திரையரங்கை சென்று அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரையரங்குகளை நடிகர் சதீஷ், ஆனந்த்ராஜ், கூல் சுரேஷ், இயக்குனர் வெங்கி, தயாரிப்பாளர் விஜய் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

சென்னை ஏர்போர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் 2,100 கார்கள் நிறுத்தக்கூடிய வகையில் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஹோட்டல் போன்ற வசதிகளும் விரைவில் இங்கு செயல்பாட்டுக்கு வரவுள்ளன. கட்டி முடியும் தருவாயில் உள்ள உணவு விடுதிகள், சில்லறைக் கடைகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com