ஹாலிவுட்டில் பிரபல இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம், உலக அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதையடுத்து அவதார் திரைப்படத்தின் 2-ம் பாகமான 'அவதார் தி வே ஆப் வாட்டர்' திரைப்படம், கடந்த 16-ம் தேதி உலகம் முழுவதும் 52 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் ‘அவதார் 2’ படம் வெளியாகி சூப்பர்ஹிட் படைத்து வருகிறது. இந்நிலையில் மேலும் ரசிகர்களை ஈர்க்க, புதுச்சேரியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டு, ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.
புதுச்சேரி-கடலூர் சாலை வணிக வளாகத்தில் உள்ள ‘பாண்டி- தி சினிமா’ மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இந்த படம் திரையிடப் பட்டுள்ளது. இந்த தியேட்டர் காம்ப்ளக்ஸில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் 3 பேர், அவதார்-2 படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல் வேடம் அணிந்து தியேட்டருக்கு வரும் ரசிகர்களை வரவேற்று உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவதார் வேடம் அணிந்துள்ள இந்த தியேட்டர் ஊழியர்களுடன் ரசிகர்கள் 'செல்பி' எடுத்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.