உலகநாடுகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் ஜி7 மாநாடு இத்தாலியில் நடைபெறுகிறது. இந்தநிலையில் இத்தாலி நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜூன் 14ம் தேதி ஜி7 மாநாடு இத்தாலியில் நடைபெறுகிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஜி7 அமைப்பில் இருக்கும் அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளே மாநாட்டில் கலந்துக்கொள்கின்றன. இதனையடுத்து இத்தாலி பிரதமர் இந்திய பிரதமரை சிறப்பு விருந்தினராக வர அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து, இந்திய பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றவுடன் முதல் பயணமாக இத்தாலி சென்றார். இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்கரான், கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முன் தினம் (12) இத்தாலி பாராளுமன்றத்தின் கீழ் சபையில் இத்தாலியில் உள்ள பிராந்தியங்களுக்கு அதிக சுய ஆட்சி அளிக்கும் சட்டம் மூலம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் ஆளும் வலதுசாரி கூட்டமைப்பு கொண்டுவந்த இந்த சட்டத்தினை எதிர்கட்சியான 5 ஸ்டார் இயக்கம் கடுமையாக எதிர்த்தது.
சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் 5 ஸ்டார் இயக்க நாடாளுமன்ற உறுப்பினர் லியோனார்டோ டோனோ, பிராந்திய விவகாரங்களின் துறை அமைச்சர் ராபர்டோ கால்டெரோலி நின்றிருந்த இடத்துக்கு நடந்து சென்று அவர் மீது இத்தாலியக் கொடியை போர்த்த முயன்றார். இதனால் ஆளும் வலதுசாரி கூட்டணியில் அங்கம் வகிக்கும் லீக் மற்றும் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சிப் பிரதிநிதிகள் டோனோவிடம் விரைந்து சென்று அவரைப் பிடித்து இழுத்தனர்.
இதனால் ஏற்பட்ட கைகலப்பில் இருந்து டோனோவை காப்பாற்ற காவலர்கள் படாதப்பாடு பட்டனர். இதனையடுத்து காயமடைந்த டோனோ அவையில் இருந்து வீல் சேரில் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து டோனோ, ஊடகங்களுக்கு கூறுகையில், “என்னை அவர்கள் பலமுறை உதைத்தனர். எனது மார்பில் வலுவாக ஒரு உதை விழுந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.” என தெரிவித்தார்.
முக்கியமான உலக நாடுகளின் தலைவர்கள் இத்தாலியில் குவிந்து இருக்கும் இந்த சமயத்தில், இப்படியொரு கைகலப்பு ஏற்பட்டது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.