
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் புயல் சின்னங்கள் உருவாகி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்த சூழலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.10.2025) தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாகவும் அதனால் பாதிப்பு ஏற்பட்டால் , செயல்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனையில் ஈடுபட்டார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த மாவட்டங்களில் சராசரியாக 56.61மிமீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மாவட்டங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , அறிவுரைகள் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும்
ஆலோசனைகளை வழங்கினார். பருவமழை குறித்து ஒரு சில உத்தரவுகளையும் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். அவை பின்வருமாறு.
•மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்குவதற்காக முகாம்களை அமைத்து, அவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு , குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும்.
•கரையோரங்களில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக மாற்ற வேண்டும்.
•பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கினால், மோட்டார் பம்புகள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு உடனடியாக அகற்ற வேண்டும்.
•மின் கம்பங்கள் பாதிக்கப்படும்போது, சீரமைக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்
•மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
•டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்முதல் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையால் நனைந்து சேதமடையாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அவற்றைச் உடனடியாக சேமிப்புக் கிடங்குகளுக்கு மாற்ற வேண்டும் , உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார்.
மழையினால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைச் சீர்செய்யத் தேவையான ஜேசிபி இயந்திரங்கள், படகுகள், மோட்டார் பம்புகள், மர வெட்டும் கருவிகள் , லாரிகள் ஆகியவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்சாரப் பாதிப்புகளை சரி செய்ய 51,639 மின் கம்பங்கள், 1,849 டிரான்ஸ்பார்மர்கள் , 1,187 கண்டக்டர்கள் உள்ளிட்ட உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியதையடுத்து, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்த மழை பாதிப்புகள் குறித்து 19.10.2025 அன்று எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட உயர் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.