துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு செல்வது என்பது அவர் விருப்பம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு செல்லும் வீடியோக்களும், அவர் சமஸ்கிரத மந்திரங்கள் கூறும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. துர்கா ஸ்டாலின் மட்டும் கோயிலுக்கு செல்கிறார் இதற்கு ஸ்டாலின் என்ன கூறப்போகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பி வந்தது. இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக-வின் சமூக வலைதள தன்னார்வலர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், திமுகவினர் பதிவிடும் செய்திகள் உண்மையாக இருக்க வேண்டும் என்றும் பாஜகவினரை போன்று பொய்யானதாக இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தினார். பாஜக போன்ற சமூக வைரஸை தான் நாம் எதிர்த்து வருவதாகக் கூறிய முதலமைச்சர், வாட்ஸ்-அப் பல்கலைக்கழகம் மூலம் பாஜக பரப்பும் வதந்திகளை நம்ப ஒரு கூட்டம் இருப்பதாகவும் விமர்சித்தார். பாஜகவும், அதிமுகவும் வேறு வேறு அல்ல என்றும் நாணயமில்லாத நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது தான் என்றும் அவர் தெரிவித்தார்.
திராவிட இயக்கம் என்பது தமிழர்களை தலை நிமிர வைக்கும் இயக்கம் என்றும் யாருடைய தலையையும் எடுக்க பிறந்த இயக்கம் அல்ல என்றும் முதலமைச்சர் கூறினார். மேலும், பாஜகவின் ஒரே வேலை, துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு போகிறார் என்பதில் தான் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரி என்றும் ஆன்மீகத்திற்கு அல்ல என்று தெளிவுப்படுத்தினார். துர்கா ஸ்டாலின் எந்த கோயிலுக்கு போகிறார், வருகிறார் என்பதை கண்காணிப்பதே பாஜகவின் வேலை என்றும், துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு செல்வது அவரது விருப்பம் என்றும் தெரிவித்தார்.