மூக்கை நுழைத்து மூக்கறுப்பட்ட ஆளுநர்: முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

மூக்கை நுழைத்து மூக்கறுப்பட்ட ஆளுநர்: முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

சென்ற வாரம் ஹிந்து ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்ததைத் தொடர்ந்து வீக் வார இதழுக்கும் முதல்வர் ஸ்டாலின் பேட்டியளித்திருக்கிறார். அதில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசியல் குறித்தும், பா.ஜ.கவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது குறித்தும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வரிடம், தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர், ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு மாநிலங்களில் புகார் எழுப்படுகிறது. தமிழகத்திலும் அதே சூழல் நிலவுகிறது.

தமிழக ஆளுநராக ஆர். என்.ரவி பதவியேற்றுக்கொண்டது முதல் தமிழ்நாட்டில் ஏதாவது குழப்பம் ஏற்படுத்துவதையே தன்னுடைய பணியாக செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு பலமுறை உணர்த்தியாகிவிட்டது. ஆனாலும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருநது நீக்குவதாக அவர் விடுத்த அறிக்கையானது, அரசியலைமைப்பு நெறிமுறைகளை மீறுவதாகும். இது நிர்வாகத்தை குளறுபடியாக்கும் விதி மீறல் செயல். ஒரு அமைச்சரை நீக்குவது என்பது முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்புரிமை சார்ந்தது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட நிறைய மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் வைத்திருக்கிறார். அது குறித்து கவலைப்படாமல் தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து மூக்கறுபட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு வளர்ச்சி அடைவது, அமைதியாக இருப்பதோ அவருக்கு பிடிக்கவில்லை.

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார். அவரிடம் நல்லெண்ணம் இல்லை. இதற்கு ஒரே தீர்வு, ஆளுநர் பதவியையே நீக்கிவிடுவதுதான். ஆளுநர்களால் பல்வேறு இடையூறுகளை சந்திக்கு வேண்டியுள்ள மாநிலங்களுக்கு இதை விட வேறு வழிமுறை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

வாரிசு அரசியல் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருவது பற்றிய கேள்விக்கும் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், எங்களைப் பற்றி குறை கூறுவதற்கு வேறு எதுவும் இல்லாத காரணத்தால் வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார்கள். இதெல்லாம் 30 ஆண்டுகளாக அடிக்கடி கேட்டு புளித்துப் போன குற்றச்சாட்டுகள். வேறு எதையாவது குறை கண்டுபிடித்து சொல்லட்டும் என்றார்.

தமிழகத்தில் ஆளுநர் – முதல்வர் மோதல் உச்சத்தில் உள்ள நிலையில் இருவரும் பத்திரிக்கைகளுக்கு அளித்து வரும் பேட்டிகளும், அவ்வப்போது வெளியிட்டு வரும் அறிக்கைகளும் தமிழக அரசியலில் தொடர்ந்து விவாதப்பொருளாகவே இருந்து வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com