"நீ இல்லாத உலகத்தில் நிம்மதி இல்லை" பி.சுசிலா முன்பு பாட்டுபாடிய முதலமைச்சர்!

CM Stalin
CM Stalin
Published on

தென்னக திரை இசையின் கான சரஸ்வதியாக திகழும் பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் கவுரவித்தார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழகம் சார்பில் பாடகி பி.சுசீலா , இசைக்கலைஞர் முனைவர் பி.எம்.சுந்தரம் ஆகியோருக்கு ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் மற்றும் 23 உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 229 மாணவர்கள் பட்டம் பெற்றனர். விழாவில், வேந்தரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரும் பல்கலைக்கழக இணை வேந்தருமான சாமிநாதன், கர்நாடக இசைக் கலைஞர் டி எம் கிருஷ்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சௌமியா உட்பட ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் விழாவில் பங்கேற்றனர்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், பழம்பெரும் பின்னணிப் பாடகி பி.சுசீலா மற்றும் இசைக் கலைஞர் பி.எம்.சுந்தரம் ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கி கவுரவித்தார். பட்டத்தை வழங்கும் போது சற்றே தடுமாறிய பாடகி சுசீலாவை ஆதரவுடன் தாங்கி முதலமைச்சர் ஸ்டாலின் நிற்க வைத்தார்.

பின்னர் பேசிய முதலமைச்சர், பி.சுசீலாவின் பாடல்களை கேட்டவர்கள், அவரது குரலுக்கு மயங்காமல் இருக்க முடியாது என்றும், அந்த வகையில் நானும் அவரது ரசிகன் என்றும் புகழாரம் சூட்டினார். மேலும், ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்திற்கான அரசு மானியத்தை 3 கோடி ரூபாயாக உயர்த்தியும், ஆராய்ச்சி மையத்தின் நூலகத்துக்கு ஒரு கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

பல்கலைக்கழகங்களின் வேந்தராக, மாநிலத்தின் முதலமைச்சரே இருந்தால் தான் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்பதை 10 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த பல்கலைகழகத்தின் வேந்தராக அவரை நியமித்துக் கொண்டதை பாராட்டுவதாக குறிப்பிட்டார். பல்கலைக்கழக வேந்தர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருவதை குறிப்பிட்ட முதல்வர், விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை எட்ட, பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை, மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com