

ஈரோடு மாவட்டம் திண்டலில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு ,ஈரோடு மேற்கு ,கோபிசெட்டிபாளையம் ,அந்தியூர், மொடக்குறிச்சி, பவானி உள்ளிட்ட 8 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார்.
இது பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல திராவிட பேரூர்தான் இந்த ஈரோடு. திராவிடத்தின் வேரான ஈரோட்டில் நமக்கு வெற்றி நிச்சயம்.திராவிட மாடல் அரசு என்பது 'டெவலப்மென்ட்' (Development) அரசாக, அனைத்துத் தரப்பு மக்களுக்கும், அனைத்து மாவட்டங்களுக்கும் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அரசுதான் இந்த திமுக அரசு".
வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட திமுக அரசு ஈரோட்டில் செய்த பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்டார் ஸ்டாலின்.
மஞ்சள் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தது, அத்திக்கடவு அவினாசி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றியது, பேரூராட்சி சார்பில் 70 பூங்காக்களை அமைத்தது,ஈரோட்டில் கல்வி ,வேளாண்மையில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு தான் என பெருமையுடன் பகிர்ந்தார்.
ஒரு கோடியே 31 லட்சம் மகளிர்க்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத்தொகை ,இலவச பேருந்து பயணம், மகளிர்க்கு கட்டணம் இல்லா விடியல் பயணம் திட்டம் என திமுக அரசின் திட்டங்களால் வீட்டிற்கு ஒருவர் பயனடைகிறார்.
புதுமைப் பெண் திட்டம், தோழி விடுதி , பெண்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கும் போது பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைப்பு , குழந்தை திருமணம் தடுப்பு, குடும்ப வன்முறை, குழந்தை பாலியல் வன்முறை போன்றவைகளுக்கு மரணதண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனை என அரசின் திட்டங்களை கூறி கரகோஷம் பெற்றார் ஸ்டாலின்.
இந்தியாவிலேயே அதிகமாக பெண்கள் பணிக்கு செல்வது தமிழ்நாட்டில் தான். ஏனெனில் இங்கு சட்டம் ஒழுங்கு பாதுகாப்புடன் இருப்பதால் தான் பெண்கள் தைரியமாக வேலைக்கு செல்ல முடிகிறது. ஆனால் இபிஎஸ் பொறாமையால் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார் . அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சாட்சி.
அதிமுக ஆட்சியில் டிஜிபியால் பெண் எஸ்பிக்கு நடந்த பாலியல் சம்பவத்தை மறக்க முடியாது. தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்கும் வழக்கில் சிக்கியவர் அதிமுக கூட்டணியில் உள்ளார்.
தமிழ்நாட்டிற்கான சாதனை எனக் கூற பிரதமரிடம் எதுவும் இல்லை. தமிழ்நாட்டிற்கு பாஜகவின் துரோக பட்டியல் திமுகவிடம் உள்ளது எனவும் ஸ்டாலின் பேசினார்.
திமுக ஆட்சியில் 60 நாட்களுக்குள் 86 சதவிகித குற்ற வழக்குகளுக்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலுடன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கேட்கிறேன் உங்கள் ஓட்டுகள் திமுக விற்கே எனக் கூறி தனது பேச்சை முடித்தார்.