52 அடி நீள கேக்...முதல்வராக பொறுப்பேற்ற பின் தவெக தலைவர் விஜய்யின் முதல் பிறந்தநாள் திருவிழா!

250 கிலோ பிரம்மாண்ட கேக் வெட்டிய கன்னியாகுமரி கிராம மக்கள்; உலகளவில் ட்ரெண்டாகும் தவெக தொண்டர்களின் நலத்திட்டங்கள்.
முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்source:news18tamilnadu
Updated on

தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய், தனது 52-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். நடிகராக மக்கள் மனங்களைக் கவர்ந்து அரசியலில் தடம் பதித்து முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்ற விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட தவெக தொண்டர்கள் திட்டமிட்டு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

திரையுலக நட்சத்திரமாகவும், தமிழக அரசியல் தலைவராகவும் உயர்ந்திருக்கும் அவரது பிறந்தநாளை தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு சமூக நலப்பணிகள் மற்றும் திருவிழாக்கள் போல கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் ரசிகர்கள் ஒன்று கூடி கொண்டாடி வருகின்றனர். மேலும் ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரத்யேக ஹேஷ்டேக்குகளை (Hashtags) உருவாக்கியும், காணொளிகள் மற்றும் விஜயின் சிறப்பு போஸ்டர்களைப் பகிர்ந்தும் உலக அளவில் அவரது பிறந்த நாளை ட்ரெண்ட் செய்து வைரலாகி வருகிறது.

தனது பிறந்த நாளை ரசிகர்கள் தங்களுக்குள் மகிழ்ச்சியாக கொண்டாடும் அதேவேளையில், பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் கட்-அவுட்டுகள் மற்றும் சுவரொட்டிகள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று விஜய் அன்பான வேண்டுகோளையும் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருவள்ளூர் பகுதியில் நிகழ்ந்த அமோனியா வாயு கசிவு காரணமாகவும், மக்களின் பாதுகாப்பு கருதியும் முதல்வர் விஜய் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்திருந்தார்.எனினும் தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, பிரம்மாண்டமான கட்-அவுட்டுகள் மற்றும் பேனர்களை வைத்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக விஜய் ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளையொட்டி ரத்ததான முகாம்கள், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்குதல், ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நற்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில் இந்த வருடமும் தமிழகம் முழுவதும் தவெக கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பெரும்பாலான பகுதிகளில் அன்னதானம் வழங்குவதைக் காணமுடிகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. ரத்ததானம் மற்றும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படவும் , பள்ளி மாணவர்கள், பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அமைச்சர்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திரையுலக பிரபலங்களும் , திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், அமைச்சர்களும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

vijay tvk
vijay tvk

முதல்வர் விஜயின் நண்பரான நடிகர் ஜெய் மற்றும் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா உள்ளிட்ட பிரமுகர்கள் நேற்று நள்ளிரவு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சரியாக 12 மணியளவில் வாணவேடிக்கைகள் வெடித்து விஜய் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கிராமமே கேக் வெட்டி கொண்டாடியது சிறப்பான செய்தியாக தற்போது வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரியில் உள்ள விராலிகாட்டுவிளை கிராமத்தில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் மக்களும் இணைந்து 250 கிலோ எடையும் 52 அடி நீளமும் கொண்ட பிரம்மாண்ட கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் ஏராளமான கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் பங்கேற்று உற்சாகமாக கேக் வெட்டி.பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரியில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் ஓரு குடும்ப நிகழ்வைப் போல அரங்கேறியது என அக்கிராமத்தில் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது பெரிய கவனம் பெற்றுள்ளது.

நடிகர் விஜயின் சிறு வயது முதலான உருவப்படம் முதல் முதல்வர் விஜயின் புகைப்படம் வரை தாங்கி வண்ண மயமாக அழகாக காட்சியளித்த இந்த கேக்கை தயாரித்த பேக்கரி அல்லது குழுவினர் மற்றும் எத்தனை நாட்களில் தயாரிக்கப்பட்டது ? என்ன ஃப்ளேவர் பயன்படுத்தப்பட்டது? எத்தனை பேருக்கு பகிர்ந்தார்கள்? போன்ற விவரங்கள் இன்னும் தெளிவாக வெளியாகவில்லை. எனினும் கிராம மக்கள் பெரும்பாலோர் இந்த கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

இதே முறையில் தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பல இடங்களில் 52 கிலோ கேக்குகளை வெட்டி தங்கள் தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.புதுச்சேரி: அரியாங்குப்பம் தொகுதி த.வெ.க. சார்பில், நடுக்கடலில் மிகப்பெரிய விசைப்படகில் சென்று வித்தியாசமான முறையில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு கேக் வெட்டப்பட்டதும் வைரலான செய்தியானது.

மேலும் தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் ஏற்பாட்டில் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம், விஷேச பூஜைகள் மற்றும் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்வும் நடைபெறுவதாகவும் , மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் தேவாலயங்கள் மற்றும் தர்காக்களிலும் முதல்வரின் நீண்ட ஆயுளுக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com