

சென்னை பெரம்பூருக்கு இன்று மதியம் முதலமைச்சர்கள் விஜய் செல்வதை ஒட்டி பெரம்பூர், வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தான் வெற்றி பெற்ற பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகை தர இருக்கிறார். இதன் பொருட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் தனது பெரம்பூர் தொகுதி மக்களுக்கு நவீன இ-சேவை மையம், பிரத்தியேக மக்கள் குறைதீர் செயலி, புதிய விளையாட்டு வளாகம், பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்த உள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணி அளவில் வியாசர்பாடி எருக்கஞ்சேரியில் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட எம் எல் ஏ அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். அத்துடன் அதே பகுதியில் உள்ள நியாய விலை கடையையும் திறந்து வைக்க உள்ளார்.
நவீன வசதிகளுடன் புதிய எம்எல்ஏ அலுவலகம்:
சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 1வது தெருவில் பெரம்பூர் தொகுதி அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் முன் பகுதியில் "பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ச.ஜோசப் விஜய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய்க்காக தனி அறையும் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தனியாக 10 கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டு 10 பணியாளர்கள் தினமும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
வியாசர்பாடி சர்மா நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள எம்எல்ஏ அலுவலகத்தில், பொதுமக்கள் அரசின் சேவைகளை எளிதில் பெறும் வகையில் ஒருங்கிணைந்த இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை முதலமைச்சர் இன்று பிற்பகல் 3 மணிக்கு திறந்து வைக்கிறார். ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டிடம் ஒன்றை புதுப்பித்து அதனை நவீனமயமான எம்எல்ஏ அலுவலகமாக மாற்றி உள்ளனர். எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு முதலமைச்சர் அருகில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று ஆய்வு செய்கிறார். புதிய ரேஷன் கார்டுகள் மற்றும் பட்டாக்களையும் பொது மக்களுக்கு அவர் வழங்குகிறார்.
பொதுமக்கள் குறைத்தீர் செயலி(Mobile App):
எம் எல் ஏ அலுவலகத்தில் தொகுதி மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்போன் செயலியான அது தொகுதி மக்களின் தேவைகள், குறைகள் மற்றும் கோரிக்கைகளை எளிதாகப் பதிவு செய்யவும், அவற்றின் தற்போதைய நிலையைத் தெரிந்து கொள்ளவும் பிரத்தியேகமாக 'பெரம்பூர் தொகுதி செயலி' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொகுதி எம்எல்ஏவான முதலமைச்சரிடம் நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட உள்ள இந்த செயலிக்கு 'மக்கள் சேவை தளம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் இந்த பிரத்யேக செல்போன் செயலியை இன்று அறிமுகம் செய்து தொடங்கி வைக்க உள்ளார். இந்த செயலி மூலம் பெரம்பூர் தொகுதி மக்கள் தங்கள் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நேரடியாக முதலமைச்சர் விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் புகார் அளித்தவர்கள் தங்களது புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் எந்த நிலையில் உள்ளது என்பதையும் செல்போன் மூலமாகத் தெரிந்து கொள்ள முடியும். புகார் அளிக்கப்பட்டது முதல் பிரச்சனைகள் தீர்க்கப்படுவது வரை தங்களுடைய மனுக்கள் எந்த நிலையில் உள்ளன என்பதையும் தொகுதி மக்கள் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எம்எல்ஏ அலுவலகத்தில் இந்த செயலியை பிரத்தியேகமாக கண்காணிப்பதற்கான நவீன கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பெறப்படும் புகார்கள் மீது குறைந்தபட்சம் 3 நாட்களுக்குள் முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அத்தியாவசியமான பிரச்சனைகளுக்கு அதிகபட்சமாக 10 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு, அது குறித்து மக்களுக்கு செயலி வழியாகவே விரிவான பதிலை தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவித்தப்பட்டுள்ளது. இந்த செயலி அரசு அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு:
நடைபாதைகள் சீரமைக்கப்படுவதுடன் மழைநீர் வடிகால் வசதிகள் மற்றும் புதிய பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன. போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக, மாநகரப் பேருந்துகளுக்கான(MTC) மின்சார வாகன(EV) சார்ஜிங் நிலையங்கள் மற்றும் புதிய பணிமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றையும் இன்று அவர் பார்வையிட உள்ளார்.
சுகாதாரம் மற்றும் விளையாட்டு வசதிகள்:
இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும் பிரம்மாண்டமான புதிய விளையாட்டு வளாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. நவீன வசதிகளுடன் கூடிய பன்நோக்கு குழந்தைகள் மருத்துவமனை மற்றும் பிரத்தியேக டயாலிசிஸ் மையம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
நேரடி நலத்திட்ட உதவிகள்:
பொது விநியோகத் திட்டத்தை சீரமைக்கும் வகையில், புதிய ரேஷன் கார்டுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் திட்டமும் நேரடியாக தொடங்கப்பட்டுள்ளது.