சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றை இணைப்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை ஒன்றை 2.3 கோடி ரூபாயில் தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளது. இதன் மூலம் சென்னை அடையாறு ஆற்றில் 10 கி.மீ. தொலைவுக்கு பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாலம் மூலம் ஈசிஆர் சாலையில் உள்ள திருவான்மியூர் மற்றும் ஓஎம்ஆர் சாலையில் உள்ள துரைபாக்கத்தை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் குறையும். ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் தற்போது ஒரு மணி நேரம் ஆகும் பயணம், இந்தத் திட்டத்துக்குப் பிறகு வெறும் 15 நிமிட நேரமாகக் குறையும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், அடுத்த மூன்று வருடங்களில் இந்தத் திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடையாறு ஆற்றின் மேம்பாலத்தில் உருவாகும் இந்த சாலைத் திட்டம் நிறைவு பெற்றால், தென் சென்னை பகுதியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கமாகவும் அமையும்.
சென்னை நகரின் பிரதான சாலைகளுள் முக்கியமானவை ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகள்தான். இவற்றில்தான் ஐடி கம்பெனிகள் மொத்தமாக அமைந்துள்ளன. மேலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகளும் இந்த சாலைகளில் அமைந்துள்ளன. முட்டுக்காடு, கோவளம், மகாபலிபுரம், திருப்போரூர், பாண்டிச்சேரி போன்ற பிரபல சுற்றுலா தலங்களையும் இந்த இரண்டு சாலைகள்தான் இணைக்கின்றன.
ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் காலை மற்றும் மாலை வேலைகளில் பயணிப்பது என்பது பலருக்கும் மிக மோசமான அனுபவமாக இருக்கும். திருவான்மியூரில் இருந்து துரைபாக்கத்தை அடைந்து பள்ளிக்கரணை ரேடியல் சாலையை அடைவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். அதோடு, சிறுசேரி சிப்காட் தொடங்கி, அடையாறு வரையும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும். எனவே, ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால் இரு சாலைகளிலுமே போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும். பயண நேரமும் ஒரு மணி நேரத்தில் இருந்து வெறும் 15 நிமிடமாகக் குறையும். இதனால் தென்சென்னை பகுதிகள் வணிக ரீதியாகவும் வளர்ச்சி பெற உதவும் என்று சிஎம்டிஏ நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.