

ஆம்புலன்ஸ் ஜீப் சேவையை தொடங்கி வைத்து இயக்கிப் பார்த்த முதல்வர்.
மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கத்திற்காக ரூ.2.90 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களைத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். மேலும் அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை அவரே ஓட்டிப் பார்த்து நேரில் ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் அருண்ராஜ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரிகள், ஊரக நலப்பணி இயக்குனரக அதிகாரிகள் மற்றும் அரசு செயலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் அலுவலக நுழைவாயில் அருகில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், ஊரக நலப் பணிகள் இயக்கத்திற்காக ரூ. 2.90 கோடி மதிப்பீட்டில் 40 புதிய வாகனங்கள் புதிதாக வாங்கி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வாகனங்களை பார்வையிட்ட முதல்வர் விஜய், அவற்றின் வசதிகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வாகனங்களுக்கான சாவிகளை ஓட்டுநர்களிடம் வழங்கியவர், அதில் ஒரு வாகனத்தை(பொலீரோ ஜீப்) சீட் பெல்ட் அணிந்து ஓட்டிப் பார்த்து அதன் செயல்திறனை ஆய்வு செய்தார்.
மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்காக புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊரக மருத்துவ சேவைகள் மற்றும் பொது சுகாதாரப் பணிகளை கண்காணிக்கும் அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக இந்த வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.