கோவை குண்டு வெடிப்பு! கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்!

கோவை குண்டு வெடிப்பு
கோவை குண்டு வெடிப்பு

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான ஆறு பேர், பூந்தமல்லியில், தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோவை, உக்கடத்தில், அக்., 23ல் நடந்த , கார் குண்டு வெடிப்பில், ஜமேஷா முபின், 29 பலியானார். இதுகுறித்து, தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

ஜமேஷா முபின் வீட்டில், 75 கிலோ வெடி மருந்து மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு ஆதரவு தொடர்பான வாசகங்கள், துண்டு பிரசுரங்கள் சிக்கின.

இதையடுத்து, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, அந்த அமைப்பு வழக்குப் பதிந்து விசாரணையை துவக்கியது.

குண்டு வெடிப்பு
குண்டு வெடிப்பு

அதன் வாயிலாக, ஜமேஷா முபின், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் என்பதை உறுதி செய்தனர். இவரது தலைமையில், மர்ம நபர்கள் பயங்கர சதித் திட்டத்துடன் செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, ஜமேஷா முபின் கூட்டாளிகளான, உக்கடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன், அப்சர் கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

இவர்களை நேற்று முன்தினம், சென்னைக்கு அழைத்து வந்து, புழல் சிறையில் அடைத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சென்னை, பூந்தமல்லியில் உள்ள, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி இளவழகன் முன் ஆஜர்படுத்தினர்.

இவர்களை, வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணை கருதி, ஆறு பேரும் மீண்டும் கோவை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர்கள் ஆஜர்படுத்தப்பட்டதால், என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்ற வளாகம் முழுதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது.

வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. பெயர், விலாசம் உள்ளிட்ட விபரங்கள் பெறப்பட்டு, அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களை தங்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, வரும் 11ல், என்.ஐ.ஏ., அதிகாரிகள், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com