கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம்: என்ஐஏ அதிகாரிகள் 45 இடங்களில் சோதனை!

NIA
NIA

கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் புதுப்பேட்டை, பெரம்பூர், ஜமாலியா, மண்ணடி ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது.

கோவை குண்டுவெடிப்பு
கோவை குண்டுவெடிப்பு

பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

தற்போது கோவை கார் வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் 45 இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கோவை கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் ஆதரவாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com