அதானி குழுமத்தின் சரிவு, எல்.ஐ.சி நிறுவனத்திற்கு ஆபத்தா?

அதானி குழுமத்தின் சரிவு, எல்.ஐ.சி நிறுவனத்திற்கு ஆபத்தா?
Published on

இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே நம்பர் ஒன் நிறுவனமாக விஸ்வரூபமெடுத்திருந்த அதானி குழுமம் கடந்த சில நாட்களாக கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதானி குழுமம் குறித்து 106 பக்கங்கள், 720க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகளைக் கொண்ட ஆய்வறிக்கை ஒன்றை ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்டது சர்வதேச அளவில் பரபரப்பான செய்தியானது.

அதானி நிறுவனம், மிகப்பெரிய மோசடியை செய்திருக்கிறது என்று ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து கடும் சரிவை எதிர்கொண்டன. அதானி குழுமத்திற்கு கடன் கொடுத்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், அதானி குழுமத்தின் பங்குகளில் முதலீடு செய்திருந்த பொதுத் துறை நிறுவனங்கள் பற்றி இரண்டு நாட்களாக இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதானி குழுமத்தில் எல்.ஐ.சி நிறுவனம் அதிகமாக முதலீடு செய்திருப்பதாக வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து எல்.ஐ.சி நிறுவனமும் கடுமையான சரிவை சந்தித்தது. இது குறித்து எல்.ஐ.சி நிறுவனம், ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறது. எல்.ஐ.சி நிறுவனம் பொதுவாக முதலீடுகள் பற்றிய விளக்கங்களை பொதுவெளியில் முன்வைத்ததில்லை.

அதானி குழும நிறுவனங்களில் பங்குகளாகவும் கடனாகவும் 35,917.31 கோடி ரூபாய் எல்.ஐ.சி நிறுவனம் மூலமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 36,474.78 கோடி ரூபாய் முதலீடு பல்வேறு காலகட்டங்களில் செய்யப்பட்டிருக்கின்றன.

எல்.ஐ.சி வைத்துள்ள அதானி கடன் பத்திரங்களின் தர மதிப்பீடு AA என்ற அளவிலோ அல்லது அதற்கு மேலேயோதான் இருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பான IRDAI நிர்ணயித்த விதிகளுக்கு உட்பட்டிருக்கிறது. ஆகவே, கவலைப்பட எதுவுமில்லை என்கிறார்கள்.

எல்.ஐ.சி நிறுவனத்தின் மொத்த முதலீட்டில், அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டிருப்பவை ஏறக்குறைய ஒரு சதவீதம் மட்டுமே என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. ஆனால், முதலீடு செய்யப்பட்டுள்ள சொத்துகளின் மதிப்பு பங்கு சந்தையின் போக்கைப் பொறுத்து குறையக்கூடும். நீண்டகால நோக்கில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளால் தனக்கு பாதிப்பு வராது என்று எல்.ஐ.சி விளக்கம் தந்திருக்கிறது.

இந்தியாவில் எல்.ஐ.சி நிறுவனத்தின் சொத்து மதிப்பு, ஒரு சில நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம். பிரிட்டனின் மொத்த மக்கள் தொகையைவிட 4 மடங்கு அதிகமான பாலிசிகளை நம்மூர் எல்.ஐ.சி நிர்வகித்து வருகிறது. எல்.ஐ.சிக்கு ஏதாவது சிக்கல் வந்தால் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் எதிரொலிக்கும் என்பதும் உண்மைதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com