சென்ற ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து அவர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சியினரிடையே கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் இப்போது சேலம் மாவட்டத்தில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தனது சுற்றுப் பயணத்தின் தொடர்ச்சியாக அவர் இன்று சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் பாமக கட்சிக் கொடி ஏற்று விழாவுக்கு சென்றிருந்தார். விழா மேடையில் ஏறிய அன்புமணி ராமதாசுக்கு அந்தக் கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மிகவும் சிறிதாக அந்த மேடை அமைக்கப்பட்டிருந்ததாலும் அளவுக்கு அதிகமான நபர்கள் அந்த மேடையில் ஏறியதாலும் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென மேடை சரியத் தொடங்கியது.
அதை நிமிட நேரத்தில் உணர்ந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் அந்த விழா மேடையில் இருந்து உடனே கீழே குதித்தார். மேடையில் இருந்த மற்ற அனைவரும் கிழே சரிந்து விழுந்தனர். ஆனாலும், கீழே விழுந்த யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
அதைத் தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அங்கு போடப்பட்டிருந்த ஒரு இருக்கையின் மீது ஏறி நின்று தனது கட்சியினரிடையே பேசினார். பாமக தலைவர் பேச இருந்த மேடை சரிந்து அனைவரும் கீழே விழுந்த சம்பவம் அந்த கட்சியினரிடையேயும் அப்பகுதி மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.