ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே ஏற்கும் கலெக்டர் அறிவிப்பு!

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே ஏற்கும் கலெக்டர் அறிவிப்பு!
Published on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே செய்ய உள்ளது. அதற்கான கழிவு அகற்றும் பணிகளுக்கான செலவை ஸ்டெர்லைட் நிர்வாகம் ஏற்க வேண்டும். இதற்காக துணை கலெக்டர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

செயலற்ற இயந்திரங்களை அகற்ற, மூலப்பொருட்கள், உதிரிபாகங்களை ஆலைக்கு வெளியே கொண்டு செல்ல ஸ்டெர்லைட் நிர்வாகம் வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப் பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் தொடர் விதிமீறல் நடவடிக்கைகளின் காரணமாக 28.05.2018 அன்று தமிழக அரசு வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும் 18.08.2020 அன்று உறுதி செய்தது.

இந்த உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது வேதாந்தா நிறுவனம். மேலும், வழக்கு நிலுவையில் உள்ள காலகட்டத்தில் ஆலையின் பாரமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதிகோரி இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தது. ஆலை பராமரிப்புப் பணிகளின் தேவை குறித்து ஆராய தமிழக அரசு அமைத்திருந்த உயர்மட்டக் குழு ஜூலை 2022ல் அறிக்கை ஒன்றை அரசிடம் தாக்கல் செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 6ம் தேதி, தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர், தூத்துக்குடி ஆட்சியாளருக்கு, ஸ்டெர்லைட் நிர்வாகம், சில ஆலை பாரமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க உத்தவிட்டுள்ளார். இதன்படி 10.04.2023 அன்று ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ளவும், பசுமைப் பரப்பை சீர்படுத்தும் பணியை மேற்கொள்ளவும் உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.

தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் மொத்தம் 9 பேர் கொண்ட உள்ளூர் மேலாண்மைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரக கூடுதல் இயக்குனர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தீயணைப்புத்துறை அதிகாரி, தூத்துக்குடி நகராட்சி செயற் பொறியாளர், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர், வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட குழுவே ஸ்டெர்லைட் ஆலைக்குள் கழிவுகளை நீக்கும் பணிகளைச் செய்வதற்கான முன் அனுபவமுள்ள நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும். எத்தனை பணியாளர்கள், எத்தனை இயந்திரங்கள், வாகனங்கள் இப்பணியில் பயன்படுத்தப்படவுள்ளது என்கிற விரிவான திட்டத்தை அந்த நிறுவனத்திடமிருந்து பெற்று அவ்வேலைக்கான ஒப்புதலை உள்ளூர் மேலாண்மைக் குழுவே வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பணிகளை மேற்கொள்பவர்கள் ஆலையின் பக்கவாட்டில் உள்ள வாசலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆலைக்குள் பணியாளர்கள், வாகனங்கள் நுழைவதையும் வெளியேறுவதையும் கண்காணிப்பு கேமிரா மூலம் பதிவு செய்யப்படும், கழிவுகள் அகற்றப்பட்ட பின்னர் வாகனங்கள், இயந்திரங்களுக்கான அனுமதியை மேலாண்மைக் குழு ரத்து செய்யும் உள்ளிட்ட நிபந்தனைகளையும் மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com