ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ரூ.30,000 இழந்ததால் மனமுடைந்த 19 வயது கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
இறந்தவர் ஏ மகாலட்சுமி என அடையாளம் காணப்பட்டார். அவர் நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மகாலட்சுமி கடந்த 15 ஆண்டுகளாக சென்னை, ஏழு கிணறுப் பகுதியில் உள்ள போர்ச்சுகீசிய தேவாலயத் தெருவில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில், மகாலட்சுமியின் தாய் சாந்தி, தனது மூத்த மகள், அந்த நேரத்திலும் தூங்காமல் அவரது அலைபேசியில் மூழ்கியிருப்பதைப் பார்த்து, அவரைத் தூங்கச் சொன்னார், அதற்கு மகாலட்சுமி “இன்னும் சில நிமிடங்களில் தூங்கி விடுவேன் அம்மா” என்று பதிலளித்திருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் கண் விழித்து எழுந்த சாந்தி, படுக்கையில் தன் மகள் மகாலட்சுமியைக் காணவில்லை என்றதும் அவரைத் தேடி அறையை விட்டு வெளியில் வந்திருக்கிறார்.
அவர் தனது அறைக்கு வெளியே வந்தபோது, மகள் மகாலட்சுமி தூக்கில் தொங்குவதைக் கண்டு, அலறி அடித்துக் கொண்டு உதவிக்காக அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்திருக்கிறார். அவர்கள் மகாலட்சுமியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினார்கள், ஆனாலும் மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாக அறிவித்து விட்டார்கள்
இறப்புக்குப் பின்னர் தான் தெரிய வந்திருக்கிறது மகாலட்சுமி தன் உறவினரின் போன் மூலம், ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ரூ.30,000 முதலீடு செய்திருந்த விஷயம், முதலில் பணத்தை ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக ஏமாற்றியவர்கள் பின்னர் பணத்தைத் திரும்பக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதால் மனமுடைந்த மகாலட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான முகாந்திரங்கள் நிலவியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.