

பிரபல நகைச்சுவை மற்றும் ஸ்டண்ட் நடிகர் முத்துக்காளை, தீவிர சிகிச்சை பெற்று வரும் மனைவி மாலதியின் உயிரைக் காப்பாற்றித் தருமாறு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு(வயது 47) மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில்(KMC) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், அதன் பக்க விளைவாக நுரையீரலில் கடுமையான தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 17 நாட்களுக்கும் மேலாக அவர் சுயநினைவின்றி வென்டிலேட்டர் உதவியுடன் மூச்சுவிட சிரமப்பட்டு வருகிறார்.
தன்னைப் போன்ற ஏழை கலைஞரால் தொடர்ந்து தனியார் மருத்துவமனையிலோ அல்லது அதிநவீன சிகிச்சைகளுக்கோ செலவு செய்ய முடியாத நிலையில், தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தலையிட்டு மாலதிக்கு உயர் சிகிச்சை(advanced treatment) கிடைக்க பரிந்துரை செய்து உதவ வேண்டும் என்று வீடியோ மூலம் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த நடிகர் முத்துக்காளை 18 வயதிலேயே கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். சினிமா மோகத்தால் இளம் வயதிலேயே சென்னைக்கு வந்த இவரால் கல்வியைத் தொடர முடியாமல் போனது. நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வந்த இவர் கல்வியில் கவனம் செலுத்தி தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க ஆரம்பித்தார்.
புகழ்பெற்ற கராத்தே வீரரும் நடிகருமான இவர் தனது 58 வது வயதில் மூன்றாவது பட்டமான தமிழ் இலக்கிய இளங்கலைப் பட்டத்தை முடித்ததற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு செய்திகளில் இடம் பிடித்தவர்.முத்துக்காளை மற்றும் விஜய் ஆகியோர் பல படங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.