
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. சாதனை. வெற்றி பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் குஜராத்தைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் 156 கிராம் எடையில், 18 கேரட் தங்கத்தில் பிரதமர் மோடியின் மார்பளவு சிலையை வடிவமைத்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 இடங்களில் பா.ஜ.க. 156 இடங்களை வென்று சாதனை படைத்தது.
இந்த நிலையில் பா.ஜ.க.வின் வெற்றியை கொண்டாடும் வகையில், குஜராத்தைச் சேர்ந்த நகை வியாபாரியும், ராதிகா செயின்ஸ் நகை தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான வசந்த் போரா, 156 கிராம் எடையில், 18 கேரட்டில் பிரதமர் மோடியின் மார்பளவு சிலையை செய்துள்ளார்.
இந்த சிலைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. பலரும் இதை வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். ஆனால், இந்த தங்கச் சிலையை விற்பது குறித்து நகைக்கடைக்காரர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
“நான் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகன். அவருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதனால் அவருக்கு தங்கத்தினாலான மார்பளவு சிலையை தயாரிக்க முடிவு செய்தேன்.
பிரதமர் மோடியின் இந்த மார்பளவு சிலையை வடிவமைக்க மூன்று மாதங்கள் ஆனது. ரூ.11 மதிப்புள்ள தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 20 கலைஞர்களின் கடும் உழைப்பில் இச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு விலை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. விற்கும் எண்ணமும் இப்போதைக்கு இல்லை” என்று தெரிவித்துள்ள வசந்த் போரா, ராஜஸ்தானை பூர்வீகமாக் கொண்டவர். ஆனால், 20 ஆண்டுகளுக்கு மேலாக சூரத்தில் நகைத் தொழிலில் ஈடுப்ட்டு வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதமே இந்த சிலை வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுவிட்டது. ஆனால், எடை 156 கிராமுக்கும் கொஞ்சம் அதிகமாக இருந்தது. பா.ஜ.க. 156 இடங்களில் வென்றதை அடுத்து கலைஞர்கள் சிலமாற்றங்களைச் செய்து எடையை 156 கிராமாக அதை குறைத்துள்ளனர் என்றார் வசந்த் போரா.