

ஈரான் உடனான போர் நிறுத்தம் தொடர்ந்தாலும் உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர்களின் விலையை நம் நாட்டில் உள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இன்று (மே 01) 19 கிலோ எடைக்கொண்ட வணிகப் பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 2,246.50 ரூபாயில் இருந்து 3,237 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த 4 மாதங்களில் மட்டும் வணிக சிலிண்டரின் விலை 1,518 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின்,
மேற்காசிய போர் என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல் வணிக பயன்பாட்டு காஸ் சிலிண்டர் விலையை ஏற்றுவது சரியல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள்!
தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் #LPGPrice-ஐ உயர்த்தியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது #WestAsiaWar என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல.
இந்த விலை உயர்வு ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.
என பதிவிட்டுள்ளார்.