மாநகராட்சி மழை நீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க ஆணையர் அறிவுறுத்தல்!

மாநகராட்சி மழை நீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க ஆணையர் அறிவுறுத்தல்!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்றுவரும் மழை நீர் வடிகால் பணிகள், சாலைப் பணிகள், கட்டடப் பணிகள், பூங்கா பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்ட நிதிகளின் கீழ் 1,481 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 379.66 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தையும் பருவமழைக்கு முன்பாகவே முடித்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஆணையர் ராதாகிருஷ்ணன், அலுவலர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

இது தவிர, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 64.70 கி.மீ. நீளத்துக்கு 384 சாலைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சாலைப் பணிகளை மேற்கொள்ளும்போது, பழைய சாலைகளை முழுவதும் அகழ்ந்தெடுத்துவிட்டு, புதிய சாலைகளை அமைக்கவும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படும் அனைத்து சாலைகளையும் தரமானதாக அமைக்கவும், மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற இடங்களில் உடனுக்குடன் சாலைப் பணிகளை விரைந்து சீர் செய்யவும் அறிவுறுத்தி உள்ளார்.

இதுமட்டுமின்றி, மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டடப் பணிகள் மற்றும் புதிய பூங்காக்கள் அமைத்தல், ஏற்கெனவே உள்ள பூங்காக்களில் மரங்கள் மற்றும் செடிகள் நடுதல், நடைபாதை அமைத்தல் போன்ற மேம்பாட்டு பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்கவும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக  அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார் ஆணையர் ராதாகிருஷ்ணன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com