கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு முன்னணிக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக பாஜக தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான அண்ணாமலை கர்நாடக சட்டசபை தேர்தல் பா.ஜ.க இணை பொறுப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் நாகராஜ் கவுடா, தேர்தல் ஆணையத்தின் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒரு புகார் கடிதம் வழங்கி உள்ளார். அந்தக் கடிதத்தில், ’’முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, கர்நாடகாவில் பணியில் இருந்தபோது, தனக்குக் கீழ் பணிபுரிந்த காவல்துறையினரை தற்போது தேர்தல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தி வருகிறார். அதோடு, கட்சிக்குத் தேவையான பணம் மற்றும் ஆட்கள் உதவியையும் பெற்று வருகிறார்” என்று அந்தப் புகார் கடிதத்தில் குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும், காவல்துறை, வருமான வரித்துறையினரை வைத்து காங்கிரஸ் கட்சியினரை மிரட்டுவதோடு, தனது வாகனங்கள் மூலமே பணப்பட்டுவாடா செய்து அண்ணாமலை தேர்தல் வேலை பார்ப்பதாகவும் அந்தப் புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவதை உறுதி செய்யும்விதமாக அண்ணாமலை தேர்தல் பிரசாரம் செய்யவோ அல்லது கர்நாடகாவில் தங்கவோ தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் மூலம் கர்நாடக மாநிலம் முழுவதும் இதுவரை 265 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள், பணம், மது பானங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 88 கோடி ரூபாய் ரொக்கப்பணம், 20 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள், 55 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள், 79 கோடி ரூபாய் மதிப்பில் தங்க, வெள்ளி நகைகள், 17 கோடி ரூபாய்க்கு போதைப் பொருட்கள் அடங்கும் என தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.