கணினி மயமாகும் டாஸ்மாக் மதுபான கடைகள்: குளறுபடிகளை முடிவுக்கு கொண்டுவரப்படுமா?

கணினி மயமாகும் டாஸ்மாக் மதுபான கடைகள்: குளறுபடிகளை முடிவுக்கு கொண்டுவரப்படுமா?

தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடிய தமிழக அரசு, அடுத்து டாஸ்மாக் நடவடிக்கைகளை கணினிமயமாக்க திட்டமிட்டிருக்கிறது. அதிக விலைக்கு விற்கப்படும் மதுப்பாட்டில்கள், தரமில்லாத மது போன்றவற்றைத் தடுக்க உற்பத்தி நிலையங்களிலிருந்து வாடிக்கையாளர் கைக்கு கிடைக்கும் வரையிலான அனைத்து நடைமுறைகளும் கணினிமயமாக்கப்பட இருக்கின்றன.

தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு மது பாட்டில்களுக்கும் கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதாக கடந்த சில மாதங்களாகவே சர்ச்சை இருந்து வருகிறது. இது தவிர டாஸ்மாக்கில் மது அருந்தியவர்கள் அடுத்தடுத்து உயிரிழக்கவே, மதுபானத்தின் தரம் பற்றிய சர்ச்சையும் எழுந்திருக்கிறது.

இது தவிர மது ஆலைகளிலிருந்து உற்பத்தியாகும் மதுபான வகைகள், டாஸ்மாக் கடைகளுக்கு வந்து சேர்வதற்குள் டூப்ளிகேட் மதுபானங்கள் எப்படியே வந்துவிடுவதாகவும் பரவலான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மது ஆலைகளில் வாங்கப்படும் மதுபானங்களின் எண்ணிக்கைக்கும், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் எண்ணிக்கைக்கும் இடையே பெரிய அளவு வித்தியாசம் இருப்பதாக தெரிகிறது.

கொள்முதல் செய்வது முதல் கடைகளில் விற்பனை செய்யப்படுவது வரை அனைத்தையும் கணினிமயமாக்குவது தவிர்க்க முடியாததாகிறது. பால்வளத்துத்துறையில் ஏற்கனவே இது பரிசீலினையில் இருக்கிறது. பால்வளத்துறையை விட பல மடங்கு வருமானத்தை அரசுக்கு பெற்றுத் தரும் டாஸ்மாக்கில் இவற்றை அமலுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் கணினி மயமாக்குவதற்காக ரூ.294 கோடிக்கான ஆர்டரை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரெயில்டெல் நிறுவனம் பெற்றுள்ளது. இனி ஒவ்வொரு மதுபாட்டில்களிலும் உள்ள பார்கோடு மூலம் அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ள முடியும். மது ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுவது முதல் வாடிக்கையாளர்கள் சென்றடையும் வரையிலான தகவல்கள் இனி டிராக் செய்யப்படும்.

டாஸ்மாக் மதுபான பாட்டில்களில் பார்கோடு இடுவது நீண்டகாலமாகவே இருந்து வந்தாலும் அவற்றை டிராக் செய்வதற்கான வழிமுறைகள் இருந்ததில்லை. இதன் காரணமாகவே போலியான மதுபாட்டில்கள் அதிகரிக்க காரணமாகியிருக்கிறது. அடுத்து வரும் ஓராண்டில் ரெயில்டெல் நிறுவனம் பார்கோடு மூலமாக ஸ்கேன் செய்யப்பட்டு மதுபாட்டில்கள் வழங்குவது தயாராகிவிடும். இனி டாஸ்மாக் கடைகளில் இணைய இணைப்பு தரப்படவேண்டும்.

விற்பனை விபரங்களை இனி சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த டாஸ்மாக் அதிகாரிகள், இணைய வழியின் மூலமாக பார்த்துவிட முடியும். மதுபான வகைகளுக்கு உள்ள வரவேற்பை பொறுத்து கூடுதல் மதுபான வகைகளை ஏற்பாடு செய்ய முடியும். இனி டாஸ்மாக், ஹைடெக் ரீடெயில் நிறுவனம் போன்று செயல்பட வாய்ப்பிருக்கிறது.

டாஸ்மாக் செயல்பாடுகளில் காட்டப்படும் அக்கறையில் பத்து சதவீதத்தை பிற துறைகளில் காட்டினாலே பல முக்கியமான பிரச்னைகளை தீர்க்கமுடியும். ஆனால், டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தில்தான் தமிழக அரசே இயங்கும் நிலையில் அதற்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள் என்கிறார்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com