மீண்டும் காங்கிரஸா...ஆசாத் என்ன சொல்கிறார்?

மீண்டும் காங்கிரஸா...ஆசாத் என்ன சொல்கிறார்?
Published on

1970-களில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, அக்கட்சியிலும், காங்கிரஸ் அரசிலும் பல்வேறு பதவிகளை வகித்தவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதலை தீர்ப்பவராகவும், கூட்டணியை இறுதி செய்யும் முக்கிய தலைவராகவும் இருந்தவர். கட்சித் தலைமையிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் அக்கட்சியிலிருந்து ராஜிநாமாச் செய்தார்.

“ராகுல்காந்தியை பக்குவம் இல்லாதவர், பொறுப்பற்றவர். அவரது குழந்தைத் தனமான நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சி பல்வேறு தோல்விகளைச் சந்திக்க நேர்ந்தது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை ராகுல்காந்தியின் பாதுகாவலர்களும், பி.ஏ.க்களும்தான் எடுக்கின்றனர். மூத்த தலைவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர்” என்று சோனியாவுக்கு எழுதிய ராஜிநாமா கடிதத்தில் ஆசாத் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் அவருக்கு பதிலடியாக ராகுல்காந்தியும், சோனியாவும் நேரடியாக எந்த விமர்சனங்களையும் வைக்கவில்லை.

காங்கிரசிலிருந்து விலகிய பின்னர் குலாம் நபி ஆசாத், பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் “முற்போக்கு ஜனநாயக ஆசாத் கட்சி” என்கிற புதிய அரசியல் கட்சியை கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்றும் தகவல்கள் உலாவின.

இந்நிலையில், “இமாச்சல் பிரதேசம், குஜராத் சட்டப்பேரவை தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு சவாலாக காங்கிரஸ்தான் இருக்க முடியும். காங்கிரஸ் கட்சி வெற்றிபெற வேண்டும். நான் காங்கிரசின் கொள்கைகளை எதிர்க்கவில்லை. அதன் பலவீனமான செயல்பாடுகளைத்தான் எதிர்க்கிறேன்” என்று கடந்த நவம்பர் மாதம் காஷ்மீரில் ஒரு கூட்டத்தில் ஆசாத் பேசியிருந்தார்.

இப்படி வெளிப்படையாக அவர் பேசியதை வைத்து அவரை மீண்டும் காங்கிரஸுக்கு இழுக்கும் நோக்கில், காஷ்மீரில் ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்குமாறு அதன் அமைப்பாளர் திக்விஜய் சிங் ஆசாத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தச் சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான அம்பிகா சோனி, யாத்திரையில் பங்கேற்றால் அந்த சந்திப்பு மீண்டும் காங்கிரஸில் சேர வழிவகுக்கும் என்று ஆசாத்திற்கு யோசனை கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் கைதேர்ந்தவராக கருதப்படுபவர் குலாம் நபி ஆசாத். அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினால் அது நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் அக்கட்சிக்கு பலம் சேர்க்கும் என்கிற கருத்தும் தில்லி அரசியலில் நிலவுகிறது.

இதனிடையே தாம் மீண்டும் காங்கிரஸில் சேர உள்ளதாக வெளியான தகவலை ஆஸாத் மறுத்துள்ளார். “இந்த தகவல் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. முற்றிலும் அடிப்படை இல்லாதது. நான் காங்கிரஸில் சேரும் பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சி மீதும், தலைமை மீதும் எனக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை. இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம்” என்று ஆஸாத் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com