
பிரதமர் மோடி பற்றிய தகவல்களின் உண்மைத்தன்மையை அறியாமல் பேசியதாக தேர்தல் ஆணையம் காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறித்து காங்கிரஸ், பா.ஜ.க. இருவரும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.
பிரியங்காவின் தீவிர தேர்தல் பிரசாரத்தைக் கண்டு பயந்துபோய் பா.ஜ.க. தேர்தல் ஆணையத்தின் மூலம் பிரியங்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி குறித்து பொய்யான தகவல்களைக் கூறியதாக குற்றஞ்சாட்டி தேர்தல் ஆணையம் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரியங்காவின் தேர்தல் பிரசாரத்தைக் கண்டு அஞ்சி பா.ஜ.க. தேர்தல் ஆணையத்தை கருவியாக பயன்படுத்தி அவரை தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் முடக்கப் பார்ப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். தேர்தல் ஆணையம் நேர்மையான முறையிலும் நியாயமான முறையிலும் செயல்பட வேண்டும். காங்கிரஸ் கொடுத்துள்ள புகாரின் பேரிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல் பா.ஜ.க.வின் சொல்படி தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் அவர் புகார் கூறினார்.
பா.ஜ.க. தலைவர்கள் ஹர்தீப்சிங் புரி, அனில் பலூனி, ஓம் பதக் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. நரேந்திர மோடி அரசு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து கொடுப்பதாக பிரியங்கா காந்தி, எந்தவித அடிப்படையும் இல்லாமல் குற்றஞ்சாட்டியுள்ளதாக பா.ஜ.க. தலைவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம், சன்வர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, இவ்வாறு அடிப்படையில்லாமல் பிரதமர் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். தகவல்களை உறுதி செய்யாமல் அவர் பேசியுள்ளார். இதனால் மக்களுக்கு தகவறான தகவல்கள் சென்றடைவதுடன், பிரதமரின் புகழுக்கும் களங்கம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இதற்கு உடனடியாக விளக்கம் அளிக்குமாறு பிரியங்காவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரதமர் மோடி அரசு நிறுவனங்களை தனியாருக்கு, குறிப்பாக தனக்கு வேண்டிய தொழிலதிபர்களுக்கு தாரைவார்த்து கொடுக்கிறார். பி.எச்.இ.எல் நிறுவனம் பலருக்கு வேலைவாய்ப்பு அளித்துவந்துள்ளது. அதை ஏன் உங்கள் நண்பருக்கு தாரைவார்த்து கொடுத்தீர்கள் என்று பிரியங்கா, தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகத் தெரியவந்துள்ளது.
இதனிடையே மத்திய அமைச்சர் அனுராக் தாகுர் கூறுகையில் பிரியங்கா காந்தி, மக்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் தேவையில்லாமல் பிரதமர் மீது புகார் கூறியுள்ளார். சிலர் எப்போதும் போலியான வாக்குறுதிகளை அளிப்பார்கள். ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆனாலும் அவற்றை நிறைவேற்றமாட்டார்கள். சத்தீஸ்கர் மாநிலத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதவர்கள், பிரதமருக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.