பாரத் ஜடோ யாத்திரை -2: காங்கிரஸ் பரிசீலனை

பாரத் ஜடோ யாத்திரை -2: காங்கிரஸ் பரிசீலனை

2023  டிசம்பர்  மற்றும் 2024 பிப்ரவரி மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில்  இரண்டாவது கட்ட பாரத் ஜடோ யாத்திரையை நடத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி பரிசீலித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரை இந்த முறை மிக பிரம்மாண்டமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் பங்கேற்பவர்கள் பாதயாத்திரையாகவும் சில சமயங்களில் வாகனங்களிலும் பயணிப்பார்கள்.

ராகுல்காந்தி நடத்திய முதல் கட்ட பாரத் ஜடோ யாத்திரை (ஒற்றுமை யாத்திரை) கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம், உ.பி., ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், தில்லி வழியாக பயணித்து ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் ஜனவரி 2023 ஆம் தேதி முடிவடைந்தது. மொத்த யாத்திரையின் மொத்த பயணத் தூரம் 4,080 கி.மீ. ஆகும்.

பாரத் ஜடோ யாத்திரை 12 மாநிலங்கள், 72 மாவட்டங்களைக் கடந்து 126 நாட்களில் காஷ்மீர் சென்றடைந்தது. இந்த நீண்டதூர பாதயாத்திரையின் போது ராகுல் காந்தி உள்ளிட்ட யாத்திரையில் பங்கேற்ற தலைவர்கள் நாட்டில் உள்ள பல்வேறு மக்களை சந்தித்து உரையாடியது உலகளவில் கவனம்பெற்றது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் பிரிவினை அரசியலுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சியாக இந்த பாரத் ஜடோ யாத்திரை நடத்தப்பட்டது. மேலும் சமூக பொருளாதாரப் பிரச்னைகளை புரிந்துகொள்ளும் நோக்கிலும் வேலையின்மை பிரச்னைக்கு தீர்வுகாணும் நோக்கிலும் இந்த யாத்திரை அமைந்திருந்தது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், கடந்த செப்டம்பர் மாதத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்  இரண்டாவது கட்ட பாரத் ஜடோ யாத்திரை விரைவில் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களும் ராகுல்காந்தியிடம் மீண்டும் பாரத் ஜடோ யாத்திரையைத் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். முதல் கட்டமாக நாட்டின் தெற்கு பகுதியிலிருந்து வடக்கு பகுதிக்கு யாத்திரை நடைபெற்றதால் இந்த முறை நாட்டின் கிழக்கு பகுதியிலிருந்து மேற்கு பகுதிக்கு யாத்திரை நடத்த வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com