கர்நாடகாவை கடனில் தள்ளும் வரை காங்கிரஸ் அரசு ஓயப்போவதில்லை - குமாரசாமி காட்டம்!

கர்நாடகாவை கடனில் தள்ளும் வரை காங்கிரஸ் அரசு ஓயப்போவதில்லை - குமாரசாமி காட்டம்!
Published on

ஆளுநர் உரையோடு ஆரம்பமாகியுள்ள கர்நாடக சட்டமன்ற கூட்டத் தொடர், முதல் கட்டத்திலேயே பரபரப்பை கிளப்பியிருக்கிறது. காங்கிரஸ் அரசு, கர்நாடகா மாநிலத்தை கடனில் தள்ளி, வென்டிலேட்டர் வைக்கும் வரை ஓயாது என்று  குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி,  கர்நாடகாவுக்கு இருண்ட காலம் காத்திருப்பதாக ஆளுநரின் உரையிலிருந்து தெரிய வருவதாக குறிப்பிட்டுள்ளார். கர்நாடகாவின் வளர்ச்சி குறித்து நம்பிக்கை தரும் விஷயங்கள் எதுவும் உரையில் இடம்பெறவில்லை என்றார்.

மாநிலத்தின் உண்மையான பொருளாதார நிலை பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் அரசு தயாராக இல்லை. தேர்தலுக்கு முன்னர் ஏகப்பட்ட வாக்குறுதிகள் அளித்த காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்த பின்னர் அதைப்பற்றி பேசுவதில்லை. அடுத்து வரப்போகும் ஐந்தாண்டுகளுக்கு மாநில அரசு என்ன செய்யப்போகிறது என்பது பற்றிய தெளிவான பார்வை இல்லை என்று விமர்சித்துள்ளார்.

கர்நாடக பா.ஜ.க தலைவரும் முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மையும் குமாரசாமியின் கருத்தையே பிரதிபலித்திருக்கிறார். முதல்வர் அலுவலகத்திலேயே லஞ்சம் பெறப்படுகிறது என்று குமாரசாமி கூறிய குற்றச்சாட்டை வழிமொழிந்துள்ள பசவராஜ் பொம்மை, 30 லட்ச ரூபாய் லஞ்சமாக தரப்பட்டதாக குமாரசாமி குறிப்பிடுகிறார். லஞ்சமாக தரப்படும் பணம், லட்சத்தைத் தாண்டி கோடிகளில் போய்க்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் எதிர்ப்பில் பா.ஜ.கவோடு குமாரசாமியின் ஜனதா தளமும் இணைந்து நிற்க வேண்டிய அரசியல் சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே குமாரசாமி வசம் இருந்த ஒக்கலிகா சமூகத்தின் வாக்குகளை டி.கே. சிவக்குமார் வளைத்துவிட்டதால் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் குமாரசாமி இருப்பதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கையில் போதுமான எம்.எல்.ஏக்களும் இல்லாத காரணத்தால் பா.ஜ.கவோடு சேர்ந்த எந்தவொரு தடாலடி நடவடிக்கையும் எடுக்கமுடியாத சூழலில் குமாரசாமி  இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தவறுகளை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டிய தேவையும் குமாரசாமிக்கு இருக்கிறது.

அடுத்து வரும் ஆறு மாதத்தில் ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைந்தால் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க பா.ஜ.க கூட்டணியில் இணைவதற்கு குமாரசாமி தயாராக இருப்பார்.  பா.ஜ.க கட்சி வலுவாக உள்ள இடங்களில் குமாரசாமி கட்சி ஒரு சவாலாக உருவெடுக்காத காரணத்தால் பா.ஜ.க கூட்டணி அமைக்க ஒப்புக்கொள்ளும். ஆனால், ஜனதா தளம் செல்வாக்காக உள்ள பகுதிகளான ஹசன் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினரின் வாக்கை குமாரசாமி இழக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com