
மக்களுக்கு சேவை செய்ய காங்கிரஸ் கட்சிக்கு பலமுறை வாய்ப்புகள் கிடைத்தும் அதை சரிவர அக்கட்சி பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சி தலைவர்களில் ஒருவரும், தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகளுமான கவிதா குற்றஞ்சாட்டினார்.
தெலங்கானா மாநிலத்தில் வருகிற நவம்பர் 30 ஆம் தேதி சட்டப்பரைவத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இங்கு ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் பி.ஆர்.எஸ். கட்சித் தலைவர்களில் ஒருவரான கவிதா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் லண்டன் சென்றார். அங்கு பேசிய அவர், கே.சி.ஆர். ஆட்சியில் தெலங்கானா மாநிலம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை முன்வைத்து நாங்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். பாரத ராஷ்டிர சமிதி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பது உறுதியாகும்.
தெலங்கானா மாநிலம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக மத்திய அரசின் ஆய்வுகளே தெரிவிக்கின்றன. வளர்ச்சியை கணக்கில் கொண்டு பார்க்கும்போது கடன் அளவு குறைவுதான்.
தெலுங்கானா மக்களுக்கு சேவை செய்ய காங்கிரஸ் கட்சிக்கு பலமுறை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அவற்றை சரிவர பயன்படுத்திக் கொள்ள அந்த கட்சி தவறிவிட்டது. அவர்கள் ஆட்சியில் மக்களுக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளைக்கூட முழுமையாக செய்துதர முடியவில்லை. மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. மக்களுக்கு சேவை செய்வதற்கு பதிலாக அவர்கள் மக்களிடமிருந்து கொள்ளையடித்துவிட்டார்கள்.
2014 ஆம் ஆண்டில் தெலங்கானா மாநிலம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஆனால், இன்று அந்த மாநிலம் முழுமையான வளர்ச்சி பெற்றுள்ளது. மாநிலத்தில் தனிநபர் வருமானமும் திருப்திகரமாக உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலம், குறுகிய காலத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் நல்லாட்சி தருவதால் மக்கள் எங்களை இரண்டு முறை ஆட்சியில் அமர்த்தினார்கள். இப்போது மூன்றாவது முறையாகவும் மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார் கவிதா. கடந்த 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் பாரத ராஷ்டிர சமிதி மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் வென்றது. அதாவது 47.4 சதவீத வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் 19 இடங்களில் வென்றது.