ஊழல் புகார் சொன்னவர் மீதே வழக்கு போடுவதா?: ம.பி. பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு!

ஊழல் புகார் சொன்னவர் மீதே  வழக்கு போடுவதா?: ம.பி. பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு!
Published on

த்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு மீது ஊழல் புகார் கூறிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி மீது வழக்கு போட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊழல் புகார்களுக்கு பதிலளிக்காமல் புகார் சொன்னவர்கள் மீதே வழக்குப் போடுவதை பாஜக வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் ஒப்பந்ததாரர்களிடம் 50 சதவீதம் கமிஷன் கேட்டு ஆளும் பாஜகவினர் கட்டாயப்படுத்துவதாகவும் ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி புகார் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பாஜக அரசு மீது பிரியங்கா காந்தி பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை கோரி பாஜகவினர் வழக்கு தொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் (X) பதிவில், ‘மத்தியப் பிரதேசத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைவது உறுதி. இதனால் தோல்வியை மறைக்க பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதிதான் 50 சதவீதம் கமிஷன் வாங்கும் பாஜக அரசு என்று புகார் கூறிய பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஊழலை மறைப்பதற்காக அது தொடர்பாக புகார் கூறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதை பாஜக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. காங்கிரஸ் மீது 41 மாவட்டங்களில் பாஜக அரசு வழக்கு தொடுத்துள்ளது. ஊழல் புகார் கூறினால், அதை மறுத்து உண்மை நிலை என்ன என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால், எங்கே ஊழல் வெளிப்பட்டுவிடுமோ என பயந்து புகார் கூறியவர்கள் மீதே வழக்கு போடுகின்றனர். நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம். உண்மை ஒரு நாள் நிச்சயம் வெளிப்படும். மக்கள் ஒருபோதும் பாஜகவினரை மன்னிக்க மாட்டார்கள்’ என்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.

‘மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்கள் பாஜக அரசுக்கு 50 சதவீதம் கமிஷன் கொடுத்தால் மட்டுமே அவர்களுக்குச் சேரவேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது’ என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

50 சதவீதம் கமிஷன் வாங்கும் பாஜக அரசை மக்கள் நிச்சயம் ஆட்சியிலிருந்து அகற்றி விடுவார்கள். கர்நாடகத்தில் பாஜக ஆட்சியிலிருந்தபோது 40 சதவீதம் கமிஷன் வாங்கியதாக பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஆனால், இப்போது ம.பி. அரசு அவர்களையும் மிஞ்சும் அளவில் 50 சதவீத கமிஷன் கேட்கிறார்கள் என்று பிரியங்கா தனது ட்விட்டர் (X) பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, ‘பிரியங்கா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ம.பி. மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா எச்சரித்திருந்தார். அவர், ‘காங்கிரஸ் எந்தவித அடிப்படையும் இல்லாமல் மத்தியப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு மீது புகார்களை அள்ளி வீசுகிறது. பிரியங்காவின் சகோதரர் இப்படித்தான் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றினார். இப்போது பிரியங்காவும் பொய்களைக் கூறிவருகிறார். பாஜக மீது வீண் பழி சுமத்தும் காங்கிரஸ் தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சர்மா கூறினார்.

இதையடுத்து, போபால் குற்றப்பிரிவு போலீஸாரிடம் மாநில அமைச்சர் விஸ்வாஸ் சாரங் மற்றும் சில பாஜக எம்.எல்.ஏ.க்கள் பிரியங்கா மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும், இந்தூரில் சன்யோகிதா கஞ்ச் போலீஸ் நிலையத்திலும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com