
காங்கிரஸ் கட்சி துருப்பிடித்த கட்சி. அந்த கட்சியால் நாட்டின் வளர்ச்சிக்கு எந்த பயனும் இல்லை. ஊழலில் திளைத்த, குடும்ப ஆட்சி நடத்திய அக்கட்சியை இந்த தேர்தலில் இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
விரைவில் தேர்தல் நடைபெற உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபாலில் பா.ஜ.க தொண்டர்களிடையே பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தன்னையும் மாற்றிக்கொள்ளவில்லை. நாட்டையும் மாற்ற விடுவதில்லை என்றும் கூறினார்.
காங்கிரஸ் ஆட்சி என்றால் குடும்ப ஆட்சிதான். ஊழலுக்கு வித்திட்டது காங்கிரஸ் கட்சிதான். நாட்டின் நலனை பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு முன்னெடுத்து வரும் வளர்ச்சித் திட்டங்களை குறைசொல்வதே அவர்களுக்கு பொழுதுபோக்காகும்.
வறுமையை ஒழிப்போம் என்று சொன்னவர்கள் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தும் வறுமையை ஒழிக்கவில்லை. ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 130 மில்லியன் மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க. அரசின் வளர்ச்சித் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளது. அரசின் திட்டங்களால் பலரும் பயனடந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஏறக்குறைய 20 ஆண்டுக்கால ஆட்சியை பூர்த்தி செய்துள்ளது. முதன்முறை வாக்களிக்கும் இளைஞர்கள் பா.ஜ.க. ஆட்சியைத்தான் பார்த்திருப்பார்கள்.
காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியை இளைஞர்கள் பார்க்காதவரை நல்லதுதான். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலம் பின்னோக்கிச் சென்றுவிடும்.
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீடு செய்யும் மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ்ஆட்சி செய்த போதிலும் மகளிர்க்கு இந்த உரிமையை பெற்றுத்தரவில்லை.
மகளிர் மசோதாவை இப்போது காங்கிரஸ் ஆதரிப்பதாக கூறினாலும், காங்கிரஸும் எதிர்க்கட்சி கூட்டணிகளும் இது தொடர்பாக வேண்டுமென்றே பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. எனவே இது விஷயத்தில் மகளிர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றார் பிரதமர் மோடி.