”காங்கிரஸ் தேசிய கட்சியே அல்ல” - கே.சி.ஆர். மகள் பரபரப்பு பேட்டி!

”காங்கிரஸ் தேசிய கட்சியே அல்ல” - கே.சி.ஆர். மகள் பரபரப்பு பேட்டி!

காங்கிரஸ் தேசிய கட்சியல்ல, அந்த கட்சி வேண்டுமானால் மற்ற கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க.வை தோற்கடிக்க தோள் கொடுக்கலாம் என்று பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவரும், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா தெரிவித்தார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி தில்லியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றக தில்லி வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் ஒரு தேசிய கட்சியே அல்ல. காங்கிரஸ் தனது உண்மை நிலையை அறிந்துகொண்டு மூர்க்கத்தனமாக செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

மதுபானக் கொள்கை தொடர்பான ஊழலில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கவிதா, அது தொடர்பான விசாரணைக்கும் ஆஜராக உள்ளார்.

மதுபான கொள்கை தொடர்பான ஊழலில் தமக்கு எந்த தொடர்பு இல்லை என்றும். மத்திய அரசு அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பழிவாங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

தெலங்கானாவில் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் மத்திய அரசு, தொடர்ந்து விசாரணை அமைப்புகளை ஏவி தெலங்கானாவில் அடிக்கடி ரெய்டு நடத்தி வருவதாக கவிதா குற்றஞ்சாட்டினார்.

பெண்கள் மீது விசாரணை நடத்த வேண்டுமானால் சட்ட விதிகளின்படி மத்திய புலனாய்வு அமைப்புகள் பெண்கள் இருக்கும் இடத்திற்கு சென்றுதான் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வலியுறுத்தி தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தோம். இதில் பங்கேற்க 18 அரசியல்கட்சிகள் முன்வந்துள்ளன. ஆனால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நான் மார்ச் 16 இல் விசாரணைக்கு வருவதாக கூறினேன். ஆனால், அவர்கள் அவசர விசாரணை என்று கூறி மார்ச் 11 இல் ஆஜராக வலியுறுத்தியுள்ளனர்.

ஜந்தர் மந்தரில் 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்திலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாகும். ஏறக்குறைய 27 ஆண்டுகளாகியும், இந்த விவகாரம் இன்னும் பேச்சளவிலேயே உள்ளது என்றும் அவர் கூறினார்.

நாடளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீடுக்கு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும். இந்த மசோதா முதன் முதலாக தேவெகெளட ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், சிலரின் எதிர்ப்பு காரணமாக நின்றுபோனது. 2018 ஆம் ஆண்டு இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. மக்களவையில் இந்த மசோதா நிறைவேறாததால் இந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com