கருப்பு சட்டை அணிந்து வந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்!

கருப்பு சட்டை அணிந்து வந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்!
Published on

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘மோடி என்ற பெயர் கொண்ட அனைவரும் திருடர்கள்’ என்று பேசியதாகவும், அது பிரதமர் நரேந்திர மோடியைத்தான் மறைமுகமாகத் தாக்கிப் பேசியதாகக் கருதப்படுகிறது என்று கூறி பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ­ராகுல் காந்தி குற்றவாளி எனத் தீர்ப்பளித்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. அதையடுத்து கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.

இதையடுத்து, நாட்டின் பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், பல அரசியல் கட்சி தலைவர்களும் இதற்குத் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து இருந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று தமிழக சட்டமன்றத்துக்கு வருகை தந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்து, ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்துக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும், ‘ராகுல் காந்திக்கு ஆதரவாக இருப்போம்’ என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளைத் தாங்கியும், பாஜகவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் அவர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதில் முத்தாய்ப்பான விஷயம் என்னவென்றால், பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனும் இன்று கருப்பு சேலையுடன் சட்டமன்றத்துக்கு வருகை தந்தார். அவரிடம் செய்தியாளர்கள், ‘காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுடன்தான் நீங்களும் உள்ளீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு அவர் சிரித்தபடி, ‘இல்லை… இல்லை… இது எதேச்சையாக ஒன்று’ என்று கூறிச் சென்றது அனைவரையும் கலகலப்பில் ஆழ்த்தியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com