

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் ரூ.25 லட்சத்தில் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும், இதர பிறபடுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும், ம.பி. மாநிலத்தில் ஐ.பி.எல். அணி உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கமல்நாத் அறிவித்தார்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் மாதம் 17 ஆம் தேதி தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பிலான தேர்தல் அறிக்கையை கமல்நாத் வெளியிட்டார்.
மொத்தம் 106 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில் 59 தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள், பெண்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எனஅனைத்து தரப்பு மக்களைக் கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடுகள் வழங்கப்படும். இதில் ரூ.10 லட்சம் விபத்துக் காப்பீடும் அடங்கும் என்றும் கமல்நாத் தேர்தல் அறிக்கையை வெளியிடுகையில் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் சார்பாக இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்.) அணி உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார். ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (எல்.பி.ஜி.) ரூ.500-க்கு வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை இரண்டு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.