

முதலமைச்சர் விஜயுடன் தலைமைச் செயலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சந்திப்பு.
காங்கிரசின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் பொழுது தற்போதைய அரசியல் சூழல்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடினர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தலைமைத் தரப்பிலிருந்து புதிய முதலமைச்சருக்கு வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு அமைந்துள்ளது.
விஜயின் அமைச்சரவையில் இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் காங்கிரசின் மூத்தத் தலைவரான ப. சிதம்பரம் விஜய்யை சந்தித்துள்ளார். பத்து நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு எந்தவிதமான கோரிக்கைகளும் முன் வைக்காமல் மரியாதை நிமித்தம் நடந்ததாக கூறப்படுகிறது.