

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் அலுவலகத்திலிருந்து ரூ.13.40 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரில் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பறக்கும் படையினர் ரெய்டு நடத்தினர். ரெய்டின் பொழுது காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி தர்மலிங்கம் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 13 லட்சத்து 40ஆயிரம் ரொக்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வாகனத்தில் வைத்து எண்ணிக் கொண்டிருக்கும்போது காங்கிரஸ் நிர்வாகிகள் இருவர் திடீரென பணத்தை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினர்.
காங்கிரஸ் நிர்வாகிகள் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிய நிலையில் அவர்களை விரட்டிப் பிடிக்க அதிகாரிகள் காரை எடுக்க முயன்ற போது சாவியை தொண்டர்கள் பறித்துக் கொண்டு தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
போலீசார் இருக்கும்பொழுதே காரைக்குடியில் பறக்கும் படையினரிடமிருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் பணத்தை பறித்து சென்றதால் அதிர்ச்சியடைந்த போலீசார் காங்கிரஸ் நிர்வாகி பழனியப்பன் என்பவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.