அயோத்தி ஸ்ரீராமர் ஆலய விழாவில் கலந்துகொள்ளாத காங்கிரஸ் தலைவர்கள்: 2024 தேர்தல் வெற்றியை பாதிக்குமா?

அயோத்தி ஸ்ரீராமர் ஆலய விழாவில் கலந்துகொள்ளாத காங்கிரஸ் தலைவர்கள்: 2024 தேர்தல் வெற்றியை பாதிக்குமா?
Published on

காங்கிரஸ் கட்சி, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்ச்சி. இதில் பங்கேற்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அறிவித்துள்ளனர். இந்த புறக்கணிப்பு, 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிவாய்ப்பை பாதிக்கலாம்.

அயோத்தி ராமர் கோயில் மாதிரி படம்
அயோத்தி ராமர் கோயில் மாதிரி படம்

நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீராமரை தெய்வமாக வணங்கி வருகின்றனர். மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தை அரசியலாக பார்க்கிறது. முழுவதும் கட்டி முடிக்கப்படாத கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர். எனவே இதில் பங்கேற்க மாட்டோம் என்று மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ஆதிர்ரஞ்சன் செளதுரி உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாததன் மூலம் காங்கிரஸ், 2024 மக்களவைத் தேர்தலில் பிகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் தேர்தலை ஒருதலைபட்சமாக மாற்றியுள்ளது. காங்கிரஸ் நிகழ்வை புறக்கணிப்பதன் மூலம் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று சித்தரிக்க பா.ஜ.க. முற்படலாம்.

காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு தவறானது. ராமர் அனைவராலும் வணங்கப்படும் தெய்வம். மேலும் மதநம்பிக்கைக்கு உரிய விஷயம். எனவே  புறக்கணிப்பை காங்கிரஸ் தவிர்த்திருக்கலாம் என்கிறார் குஜராத்தை சேர்ந்த மூத்த காங்கிரஸ்தலைவர் அர்ஜுன் மோத்வாடியா.

மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் கூறுகையில், “ அயோத்தி நிகழ்வை காங்கிரஸ் புறக்கணிக்கும் முடிவு துரிதிஷ்டமானது. காங்கிரஸ் இந்த முடிவை எடுக்க தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு சிலரே காரணம் என தெரிகிறது. இந்த முடிவின் மூலம் காங்கிரஸ், மதநம்பிக்கையுள்ள காங்கிரஸ் தொண்டர்களின் மதநம்பிக்கையை புண்படுத்திவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளதுரி ஆகிய மூவருக்கு மட்டும் அயோத்தி கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள அயோத்தி அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. ஒருவேளை ராகுல்காந்திக்கு அழைப்புவிடுக்காததால் அவர்கள் விழாவை புறக்கணிக்கிறார்களா என்பது தெரியவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com