2024 மக்களவைத் தேர்தலில் போட்டியா… நிதிஷ் குமார் என்ன சொல்கிறார்?

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியா… நிதிஷ் குமார் என்ன சொல்கிறார்?

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், நீண்டகாலம் நாளந்தா மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தவர்.

2005 ஆம் ஆண்டில் அவர் எம்.பி. பதவியிலிருந்து விலகி பீகார் முதல்வரானார். தற்போது நாளந்தா மக்களவைத் தொகுதியில் கெளஷலேந்திர குமார் என்பவர் எம்.பி.யாக இருக்கிறார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் அந்த தொகுதி எம்.பி.யாக இருக்கிறார்.

இந்த நிலையில் நிதிஷ்குமார் போட்டியிட விரும்பினால் நாளந்தா தொகுதியை அவருக்கு விட்டுக் கொடுக்கத் தயார் என்று கெளஷலேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் நிதிஷ் குமாரிடம், வரும் 2024 மக்களவைத் தேர்தலில் நாளந்தா தொகுதியில் போட்டியிடுவீர்களா? தொகுதியை விட்டுத் தருவதாக கெளஷலேந்திர குமார் தெரிவித்துள்ளாரே என்று கேட்டதற்கு, நீங்கள் ஏன் அதைப்பற்றி கவலைப்படுகிறீர்கள். இப்போது எதற்கு அந்த கேள்வி என்று கூறி அசட்டு சிரிப்புடன் பதில் சொல்வதை தவிர்த்துவிட்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பா.ஜ.க.வுடன் உறவை துண்டித்துக் கொண்ட நேரத்தில் நிதிஷ்குமார் பக்கத்து மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் புல்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடக்கூடும் என்று வதந்திகள் உலவின. இந்த தொகுதி முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தொகுதியாகும். இந்த தொகுதியில் குர்மி இனத்தவர்கள் அதிகம் உள்ளனர். நிதிஷ்குமாரும் குர்மி வகுப்பைச் சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து அகற்ற எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிதிஷ்குமார், பிரதமர் நரேந்திர மோடியின் 100 வது மனதில் குரல் நிகழ்ச்சி பற்றியும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ்குமார் ஈடுபட்டு வந்தாலும் அவரது முயற்சி வெற்றிபெறுமா என்பது சந்தேகமே என்கின்றனர் பா.ஜ.க.வினர். ராகுல், மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் இவர்களை ஒன்றுசேர்ப்பது சாதாரண காரியமல்ல. ஒவ்வொருவரும் வெவ்வேறு கொள்கை உடையவர்கள் என்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள்.

கடந்த ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து நிதிஷ்குமார் விலகியதால், பிகாரில் பா.ஜ.க. ஆட்சியை இழந்தது. அதிலிருந்தே 2024- இல் பிரதமர் பதவி காலியில்லை என்று பா.ஜ.க.வினர் கூறிவருகின்றனர்.

அடல் பிகாரி வாஜபேயி அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகித்த நிதிஷ்குமார், பிரதமராகும் ஆசை தனக்கு இல்லை என்று கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com